சென்னை குடிநீருக்காக கல்லணையில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடி நீர் திறப்பு
4/29/2015 3:39:15 PM
திருச்சி: சென்னை குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 25ம் தேதி காலை 11 மணிக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் காவிாியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று இரவு 11 மணிக்கு தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தது. ஆரம்பத்தில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் கிடைத்த தண்ணீர் பின்னர் 4 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அந்த தண்ணீர் முழுவதும் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. இது நாளை இரவு அணைக்கரையை அடையும். இந்த தண்ணீர் வருவதை தொடர்ந்து ஏற்கனவே அணைக்கரையில் இருந்து வீராணத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6 நாட்களுக்கு (அதிகபட்சமாக 1.5 டிஎம்சி வரை) இந்த தண்ணீர் வீராணத்துக்கு திறக்கப்படும்.இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 68.900 அடி. அணைக்கு வினாடிக்கு 2,505 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி திறக்கப்படுகிறது.