டெல்லி பயணம் வெற்றிதான்: விஜயகாந்த் பேட்டி
4/29/2015 3:38:22 PM
சென்னை: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்ற டெல்லி பயணம் வெற்றி தான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், முல்லை பெரியாறு, தமிழக மீனவர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியை நேற்று முன்தினம் சந்தித்து மனு கொடுத்தார்.அதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். உடன் அவருடைய மனைவி பிரேமலதா, இளைஞரணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் வந்தனர்.சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்: பிரதமரை சந்தித்தீர்களே உங்களது பயணம் வெற்றியா?ஆம் எங்களது பயணம் வெற்றி தான். தமிழகத்தில் இரு துருவங்களாக செயல்பட்டு கொண்டு இருக்கும் பாஜ, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சி பிரதிநிதிகளையும் ஒன்றாக இணைத்து டெல்லிக்கு பிரதமரை சந்திக்க அழைத்து சென்றதே மிகப்பெரிய வெற்றி தான். பிரதமர் எங்களுடைய கோரிக்கைகளை கவனமாக கேட்டார். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
டெல்லிக்கு சென்ற இதே கூட்டணி வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் பெரும் வெற்றி கிடைக்குமா?அது பற்றி நான் இப்போது எதுவும் கூற முடியாது.உங்களது டெல்லி பயணத்தில் அன்புமணி பங்கேற்காதது குறித்து உங்களுக்கு வருத்தமா?அவர் வராததால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே அவர் வராததால் வருத்தம் இல்லை.ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வக்கீல் ஆச்சாரியா தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு சரியானது என்று கூறியிருக்கிறாரே? அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யாவே தீர்ப்பை வரவேற்று கூறிய பின்பு நான் மேலும் மாற்று கருத்து தெரிவிக்க என்ன இருக்கிறது.கர்நாடக முதல்வர் சித்தராமையா வரும் 30ம் தேதி பிரதமரை சந்திக்க இருக்கிறாரே?நாம் நம்முடைய மாநில பிரச்னைகளுக்காக ஒட்டுமொத்தமாக பிரதமரை சந்தித்து மனு கொடுத்து இருக்கிறோம். அதே போல் அவர்களும் அவர்களுடைய மாநில பிரச்னைகளுக்காக செல்கிறார்கள். இவ்வாறு அவர் பதில் கூறினார்.