லஞ்சம் வாங்கி கைதான பெண் எஸ்ஐ சிறையிலடைப்பு
4/29/2015 2:48:08 PM
மண்ணச்சநல்லூர்: விபத்து வழக்கு ஒன்றில் வேன் டிரைவரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட பெண் எஸ்ஐ சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்த மேலசீதேவிமங்கலத்தை சேர்ந்தவர் திவாகர்(27). வேன் உரிமையாளர். கடந்த 24ம் தேதி மண்ணச்சநல்லூர் ரோட்டில் வேனில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் திவாகருக்கும், கார் டிரைவர் பாலாஜிக்கும் லேசான காயம் ஏற்பட்டது.காரின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது. இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசில் பாலாஜி புகார் செய்தார். எஸ்ஐ தேவகி(28) இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார். திவாகர் மீது வழக்கு பதியாமல் இருக்க எஸ்ஐ தேவகி ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் திவாகர் புகார் அளித்தார்.போலீசார் ஆலோசனைப்படி, நேற்று திவாகர் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று எஸ்ஐ தேவகியிடம் கொடுத்தார். பணத்தை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்ஐ தேவகியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து, அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.