நைஜீரியாவில் தீவிரவாதிகள் கடத்திய சிறுமிகள் உட்பட 300 பேர் மீட்பு
4/29/2015 2:46:15 PM
நைஜீரியா: தீவிரவாதிகள் கடத்தி சென்ற சிறுமிகள் உட்பட 300 பேரை நைஜீரியா நாட்டு ராணுவம் அதிரடியாக மீட்டது.நைஜீரியா நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பெண்கள், சிறுமிகளை தீவிரவாதிகள் அவ்வப்பொழுது கடத்தி செல்கின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சிபோக் பகுதியில் பள்ளிக்கு சென்ற மாணவிகளை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். சிலர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த நிலையில், இன்னும் 219 மாணவிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஓராண்டாகியும் அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தும் மாணவிகளை மீட்க முடியவில்லை. கடத்தி செல்லும் மாணவிகள், பெண்களை தற்கொலை படை தாக்குதலுக்கு தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், போகோ ஹரம் தீவிரவாதிகள் மீண்டும் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். சிறுமிகள் மற்றும் பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்று நைஜீரியாவின் வடக்கு சாம்பிசா வனபகுதியில் உள்ள தங்களது முகாம்களின் அடைத்து வைத்திருந்தனர். தகவலறிந்து ராணுவத்தினர் நேற்று அங்கு விரைந்து சென்றனர்.தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். பின்னர், முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டிருந்த 207 சிறுமிகள், 93 பெண்கள் மீட்கப்பட்டனர். தீவிரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் சில தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்டவர்கள். ஓராண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் யாரும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.