ஆப்கனில் நிலச்சரிவு 52 பேர் பரிதாப பலி
4/29/2015 2:45:28 PM
காபூல்: வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பதக்ஷான் மிகவும் பின்தங்கிய பிராந்தியமாகும். தஜிகிஸ்தான் நாட்டை ஒட்டி அமைந்துள்ள இந்த மலை பிராந்தியத்தில் ஏப்ரல், மே மாதங்களில் பனிக்கட்டிகள் உருகி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இங்குள்ள கவாஹன் பகுதியில் நேற்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு கிராமம் அடியோடு மண்ணில் புதைந்தது. 100க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்தனர். நேற்று மாலை வரை 52 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். ஒரு சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த நிலச்சரிவு காரணமாக சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலமாக மட்டுமே இந்த பகுதிக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு படையினர் நிலச்சரிவின் மறுபக்கத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மண்ணில் இன்னும் நிறைய பேர் புதைந்திருக்கலாம் என்பதால் உயிர்பலி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.