பூகம்பத்தால் உறவினர்களை காணவில்லை: மனிஷா கண்ணீர்
4/29/2015 2:40:52 PM
இந்தியன், முதல்வன், மும்பை எக்ஸ்பிரஸ், மாப்பிள்ளை என பல தமிழ் படங்களில் நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. இவர் நேபாளத்தை சேர்ந்தவர். நடிப்பதற்காக இந்தியா வந்தவர். மும்பையில் தங்கிவிட்டார். இவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் நேபாளத்தில் உள்ளனர். கடந்த 2 ஆண்டுக்கு முன் மனிஷாவை புற்றுநோய் தாக்கியது. சிகிச்சைக்கு பிறகு அந்நோயிலிருந்து மீண்டாலும் ெதாடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2 வருடத்துக்கும் மேலாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது தமிழ், கன்னடத்தில் உருவாகும் ‘ஒரு மெல்லிய கோடு’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை பூகம்பம் ஏற்பட்டது. இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஷூட்டிங்கில இருந்தார் மனிஷா. அப்போது அவருக்கு நேபாளத்திலிருந்து பூகம்பம் குறித்து உறவினர் ஒருவர் செல்போனில் மெசேஜ் அனுப்பினார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பெற்றோருக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
இதுகுறித்து மனிஷா கூறும்போது,’பூகம்பத்தில் எனது பெற்றோருக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றபோது ஆறுதல் ஏற்பட்டது. ஆனாலும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருக்கிறார்கள். எனது உறவினர்கள் பலரை காணவில்லை. அதை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது. எனக்கு மிகவும் பிடித்த பக்தபூர், பட்டன் போன்ற இடங்கள் அழிந்துவிட்டது. ஏற்கனவே மின்சாரம், குடிநீர் என மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பூகம்பத்துக்கு பிறகு நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. விரைவில் நேபாளத்துக்கு செல்வேன். அங்குள்ள மக்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இந்த சோகமான நேரத்தில் அவர்களுடன் இருக்க விரும்பு
கிறேன்’ என்றார்.