பிரேகு ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா முன்னேற்றம்
4/29/2015 2:38:42 PM
பிரேகு(செக் குடியரசு): வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரமான செக். குடியரசின் கரோலினா பிளஸ்கோவா பிரேகு ஓபன் டென்னிஸின் முதல் சுற்றில் பெரும் போராட்டத்துக்கு இடையே ஜெர்மனி வீராங்கனை அன்னிகா பெக்கை வீழ்த்தினார்.செக். குடியரசில் பிரேகு நகரில் பிரேகு ஒபன் சிவப்பு களிமண் தரை மகளிர் டென்னிஸ் போட்டிகள் நேற்று துவங்கியது. முதல் சுற்று ஆட்டமொன்றில் முதல் நிலை வீராங்கனையான செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ஜெர்மனி வீராங்கனை அன்னிகா பெக்கை எதிர் கொண்டார். பிளிஸ்கோவா சற்றும் எதிர்பாராத வகையில் முதல் சுற்றை அதிரடியாக துவங்கினார் அன்னிகா பெக். பலத்த மழையால் ஆட்டம் இரண்டு முறை நிறுத்தப்பட்டது. மேலும், ஆட்டம் முழுவதும் லேசான மழைத்தூறலும் காணப்பட்டது. தூறலுக்கு இடையே விளையாடியதால் இருவரும் சிரமப்பட்டனர்.
முதல் செட்டில் பிளிஸ்கோவாவின் சர்வீஸ் கேம்களை முறியடித்த அன்னிகா பெக், 2-6 என்ற கேம் கணக்கில் அந்த செட்டை எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சுதாரித்துக் கொண்ட பிளிஸ்கோவா, அன்னிகா பெக்கின் சர்வீஸ் கேம்களை வரிசையாக முறியடித்து 6-1 என்ற கேம் கணக்கில் செட்டை கைப்பற்றினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் அதிரடி சர்வீஸ்கள், பேஸ் லைன் வின்னர்கள் மூலம் அசத்தலாக ஆடினார் பிளிஸ்கோவா. இதனால அந்த செட்டும் அவரது வசமானது. பிளிஸ்கோவா 2-6, 6-1, 6-3 என்ற செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு முதல் சுற்று ஆட்டமொன்றில் பல்கேரியாவின் ஸ்வெட்லானா பிரா ன்கோவா, பெலாரஸின் ஓல்கா கோவோர்ட்சோவாவை எதிர்கொண்டார். இந்தப்போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்கோவா 7-5, 6-1 என நேர் செட்களில் வெற்றி பெற்றார். செக். குடியரசு வீராங்கனை டானிசா அலெர்டோவா, பிரான்ஸின் அலீஸ் கார்னெட், சீனாவின் ஷீய் ஜங், செர்பியாவின் அலெக்சாண்ட்ரா குரூனிக், பெல்ஜியத்தின் விக்மேயர் ஆகியோரும் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.