நேபாள பூகம்பத்தின் பயங்கரம் : 80 லட்சம் பேர் பாதிப்பு : 80 மணி நேரத்திற்கு பிறகு இருவர் உயிருடன் மீட்பு
4/29/2015 2:15:28 PM
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக 39 மாவட்டங்களில் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காத்மாண்டுவில் இடிபாடுகளில் இருந்து 80 மணி நேரத்திற்கு பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை 7.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் காத்மாண்டு உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. கட்டிடங்கள் வீடுகள் மண் குவியலாக நொறுங்கி விழுந்தன. நேபாள நிலநடுக்கத்தின் பாதிப்பு எல்லை பகுதியில் உள்ள பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களிலும் ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் 75க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூகம்ப பீதி காரணமாக நேபாளம் மற்றும் இந்தியாவில் மருத்துவமனைகளின் உள்ளே தங்கி சிகிச்சை பெற மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே அவர்களுக்காக மருத்துவமனைகளுக்கு வெளியே தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்தியாவில் பூகம்ப நிவாரண பணிகளை மேற்கொள்ள தர்மேந்திர பிரதான், ஜே பி நட்டா, ராதா மோகன், அனந்த குமார் ஆகிய 4 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் நேபாள நாட்டிற்கு உதவுவதற்காக இந்திய ராணுவத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினர் உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட பொருட்களை அனுப்பிவைத்து வருகின்றனர். பீகாரில் இருந்து ஏராளமான பொருட்கள் லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதே போல் பீகாரைச் சேர்ந்த சம்பரன் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் நேபாள பூகம்பத்தில் இருந்து மீட்கப்பட்டு இந்திய நேபாள எல்லையில் உள்ள ரக்சவுல் என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டு இந்தியா கொண்டு வருவதற்காக 10 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் திருப்திகரமாக இல்லை என அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா தெரிவித்துள்ளார். பல்வேறு பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், நிவாரண பொருட்கள் தட்டுப்பாடு காரணமாகவும் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அவர் கவலை தெரிவித்துள்ளார். தற்போது பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இடிபாடுகளில் இருந்து குவியல் குவியலாக பிணங்கள் மீட்கப்பட்டு வருவதால், அவர்களது உடல்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு ஆங்காங்கே மொத்தமாக தகனம் செய்யப்பட்டு வருகிறது. எனவே தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்பு பணி தொய்வு காரணமாக பொது மக்கள் தங்களது வீடுகளின் இடிபாடுகளை தாங்களே தன்னார்வலர்களுடன் அகற்றி அதில் சிக்கி இருக்கும் உறவினர்களின் உடல்களை அகற்றும் அவலமும் காணப்படுகிறது.
இதற்கிடையில் நேபாளத்தில் பூகம்பத்தின் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்காக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ராணுவ வீரர்கள் விரைந்து உள்ளனர். மேலும் ஐநா குழுவினரும் அங்கு சென்றுள்ளனர். மேலும் நிவாரணத்திற்காக சர்வதேச நாடுகளில் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன.இருந்த போதிலும் அங்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருவதாக ஐநா எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஐநா ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பூகம்பம் காரணமாக 39 மாவட்டங்களில் உள்ள சுமார் 80 லட்சம் பேர் தவித்து வருகின்றனர். அவர்களில் சுமார் 11 மாவட்டங்களில் 14 லட்சம் பேர் பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் காத்மாண்டுவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மகாராஜ கஞ்ச் என்ற இடத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த சுனிதா சிதவுலா என்ற பெண்ணை சுமார் 80 மணி நேரத்திற்கு பிறகு அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்டுள்ளனர். அதே போல் ரிஷி கனால் என்பவரை நேபாள-பிரான்ஸ் கூட்டு படையினர் சுமார் 80 மணி நேரத்திற்கு பிறகு உயிரிடன் மீட்டுள்ளனர். நேபாள பூகம்பத்தையொட்டி அங்கு 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மீட்பு பணிகளின் போது 8 நேபாள வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த 28 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.