பஞ்சாப் காங்கிரசில் பரபரப்பு ராகுலுக்கு போட்டியாக விவசாயிகளிடம் குறை கேட்ட மாஜி முதல்வர்
4/29/2015 2:13:33 PM
அமிர்தசரஸ்: பஞ்சாபில் ராகுல் காந்திக்கு போட்டியாக காங். எம்பியும் முன்னாள் முதல்வருமான அம்ரிந்தர் சிங் விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டது பஞ்சாப் காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று பஞ்சாப் சென்றார். எக்ஸ்பிரஸ் ரயில் பொது பெட்டியில் சாதாரண மக்களுடன் இயல்பாக பயணம் மேற்கொண்டார். ஆசியாவின் மிகப் பெரிய தானிய களஞ்சியமாக விளங்கும் கன்னா உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளிடம் குறைகளை கேட்டார். பஞ்சாப், அரியான ஆகிய மாநிலங்களில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றன. இதனால் தங்களது சேமிப்பு கிடங்குகளில் குவிந்து கிடக்கும் கோதுமை மூட்டைகளை எவ்வாறு விற்பது என்று தெரியாமல் பஞ்சாப் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் விவசாயிகளின் நிலத்தை பறித்துக் கொள்ளும் வகையிலான நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராகுலுடன் ஷகீல் அகமது உள்ளிட்ட தலைவர்களும் உடன் சென்றனர்.இந்த சூழலில் ராகுலுக்கு போட்டியாக காங்கிரஸ் எம்பியும் முன்னாள் முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங் அமிர்தரசில் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டார். ராகுல் வருவதை அமரீந்திர் சிங்கிடம் உள்ளுர் தலைவர்கள் சொன்ன போது அவருக்காக காத்திருக்காமல் அமிர்தசரஸ் போய் சேர்ந்து விட்டார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் அமிர்சரசில் இருந்து மாநில தலைவர் பிரதாப் சிங் பஜ்வா அம்பாலா சென்று ராகுலை வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ராகுல் காங்கிரஸ் தலைமை பொறுப்புக்கு வரக்கூடாது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் அமரீந்தர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.