போலி சான்றிதழ் விவகாரம் : டெல்லி சட்ட அமைச்சர் மீது கெஜ்ரிவால் நடவடிக்கை எடுப்பாரா? பதவி நீக்க கோரி எதிர்கட்சிகள் வலியுறுத்தல்
4/29/2015 2:13:04 PM
புதுடெல்லி: போலி சான்றிதழ் கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டெல்லி ஆம் ஆத்மி அரசின் சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமரை பதவி நீக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.டெல்லியில் ஆம் ஆத்மி முதல்வர் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருப்பவர் ஜிதேந்திர சிங் தோமர். இவர் போலி சான்றிதழ்களை கொடுத்ததாக சந்தோஷ்குமார் சர்மா என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இவர் சட்டம் படித்ததாக கூறப்படும் பீகார் மாநில திலக் பல்கலை மற்றும் அறிவியல் இளங்கலை பயின்றதாக கூறப்படும் உத்தரபிரதேச மாநில லோகியா பல்கலை ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இரண்டு பல்கலை கழகங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிலில் அந்த எண்ணில் வேறு ஒருவர் பெயர்தான் உள்ளது. சான்றிதழ்கள் திருத்தப்பட்டுள்ளன என்று பதில் அளித்திருந்தன.
தற்போது இந்த விவகாரம் ஆம் ஆத்மி அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. அமைச்சரின் சட்ட சான்றிதழ் குறித்து டெல்லி ஐகோர்ட் பார் கவுன்சில் விசாரணையை தொடங்கியுள்ளது. இதுகுறித்து தோமர் கூறுகையில், நான் நீதிமன்றத்தில் முறையான ஆவணங்களை தாக்கல் செய்வேன் என்றார்.இதற்கிடையில் அவரை பதவி நீக்கம் செய்ய ேவண்டும் என பாஜ வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அதன் செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி கூறுகையில், சட்ட அமைச்சராக இருக்கும் ஒருவரே சட்டத்தை வளைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஆம் ஆத்மியின் லட்சணத்தை இது அம்பலப்படுத்தியுள்ளது என்றார். காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் கூறுகையில், உடனடியாக சட்ட அமைச்சர் நீக்கப்பட வேண்டும் என்றார்.
இந்த விவகாரத்தில் ஜிதேந்திர சிங் தோமர் மீது முதல்வர் கெஜ்ரிவால் மிகவும் கோபத்துடன் இருப்பதாக தெரிகிறது. எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜிதேந்திர சிங் தோமர், கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து வழக்கின் உண்மை நிலவரங்களை எடுத்து கூறினார். இருந்த போதிலும் ஆம் ஆத்மி அரசு மீதான கறையை துடைக்க வேண்டுமானால் ஜிதேந்திர சிங் தோமர் நீக்கப்பட வேண்டும் என்பதில் கெஜ்ரிவால் உறுதியாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்த போது நைஜீரிய பெண்ணை அவமதித்ததாக முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.