மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து நாளை ஸ்டிரைக் : பஸ், ஆட்டோ ஓடுமா? 43 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
4/29/2015 2:10:34 PM
சென்னை: மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய போக்குவரத்து சட்ட மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் நாளை 43 தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன. எனவே நாளை பஸ், லாரி, ஆட்டோக்கள் ஓடாது என தெரிகிறது.உலகிலேயே சாலை விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிர்பலிகளும் இந்தியாவில் தான் அதிகம். இதனை குறைப்பதற்காக மோட்டார் வாகன சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜொ்மனி உள்ளிட்ட பல நாடுகளில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி புதிய வரைவு சட்டத்தை மத்திய அரசு தயாரித்து உள்ளது.இந்த புதிய சட்டத்தின்படி, தற்போது அமலில் உள்ள பெர்மிட் முறைகள், டிரைவிங் லைசென்ஸ் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு புதிய ெபர்மிட், புதிய லைசென்ஸ்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.போக்குவரத்து விதி மீறல்கள், விபத்துகளுக்கு கடும் அபராதம், சிறை தண்டனைக்கும் இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது. ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டினால் 500 அபராதம் விதிக்கப்படும்.
மீண்டும் அதே தவறு செய்தால் அபராதம் இரு மடங்கு ஆகும். பின்னர் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். லைசென்ஸ், இன்சூரன்ஸ் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். குறிப்பிட்ட வருடங்கள் ஓடிய பின் பழைய வாகனங்கள் சாலைகளில் செல்ல தடை விதிக்கப்படும். தற்போது உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இனி இருக்காது. அதற்கு பதிலாக அந்த பணியை தனியார் நிறுவனங்கள் செய்யும். இதனால் போக்குவரத்து துறை படிப்படியாக தனியார் மயமாகிவிடும் என்றும் ஏழை, எளியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இதனால் இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வரக்கூடாது என்று கூறி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய மசோதாவை கண்டித்து நாளை (30ம் தேதி) இந்தியா முழுவதும் 43 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன.
எனவே நாளை தமிழகத்தில் ஆட்டோக்கள், லாரிகள், பஸ்கள் ஓடாது. ஸ்டிரைக்கில் வாகன உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. தமிழகம் முழுவதும் 2.40 லட்சம் ஆட்டோக்களும், சென்னையில் மட்டும் 73 ஆயிரம் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் ஓடாது என ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் சேஷசயனம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அதிமுக தொழிற்சங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிஐடியு தொழிற்சங்க தலைவர் சவுந்தர்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். கேரளாவில் இன்று நள்ளிரவு முதல் ஸ்டிரைக் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. கேரளாவில் அரசு பஸ்களும் நாளை ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.தொமுச அதிருப்தி: போராட்டம் தொடர்பாக தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:
இந்த சட்டம் அமலுக்கு வந்தால், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு கூட பன்னாட்டு முதலாளிகளை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாகனத்தை பராமரிக்க வேண்டும் என்றாலும் வாகன உற்பத்தியாளர்களுடைய முகவர்களிடம் மட்டுமே சரி செய்ய வேண்டும் என்ற அம்சமும் அந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். புதிய உதிரி பாகங்களை பொருத்துவது கூட அந்த வாகன உற்பத்தியாளர்களிடம் மட்டும் வாங்க வேண்டும் என்ற நிலைமை ஏற்படும். ஓட்டுனர்கள் சிறு தவறு செய்யப்பட்சத்தில் கூட கடுமையான தண்டனை வழங்கப்படுவதாக அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு சட்டம் என்பது அனுமதிக்கப்பட்டால், வாகனங்கள் சாலையிலும் ஓட்டுனர்கள் சிறைச்சாலையிலும் இருப்பார்கள். உணர்வு உள்ள அனைவரும் இதனை எதிர்த்து ஓரணியில் திரண்டு நாளை நடக்க உள்ள இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அண்ணா தொழிற்சங்கம் இதுவரை அவர்களுடைய நிலைபாட்டை தெரிவிக்கவில்லை என்றார்.