திருவண்ணாமலை அருகே அரசு பஸ் மோதி 5 தொழிலாளர்கள் பலி : சாலையோரத்தில் நின்றிருந்தபோது பரிதாபம்
4/29/2015 2:09:59 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று காலை சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் மீது அரசு பஸ் மோதியது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் அடுத்த தென்மாத்தூர் கிராமத்தை சேர்ந்த 20 கூலி தொழிலாளர்கள் இன்று காலை 5.30 மணியளவில், அங்குள்ள சாலையோர டீக்கடையில் டீ குடித்தனர். பின்னர் கடையையொட்டி உள்ள வெற்றிவேல் முருகன் கோயில் அருகே சாலையோரத்தில் 10 தொழிலாளர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். மற்றவர்கள் சாலையின் எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது மதுரையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக சென்றது. இதனை கண்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் கூலி தொழிலாளிகள் மீது பஸ் மோதியது.
இதில் சீமான்(70), ஏழுமலை(46) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். ராமலிங்கம்(55), அருணாச்சலம்(50), ரங்கன்(40), சுப்பிரமணி(55), முனிசாமி(45), கானுலு(80) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த ஏழுமலை, மற்றொரு ஏழுமலை ஆகியோர் காயமின்றி தப்பினர்.காயமடைந்தவர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமலிங்கம், அருணாச்சலம், ரங்கன் ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விபத்து நடந்த தென்மாத்தூரில் வேகத்தடை அமைக்கவும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் 100க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வேகத்தடை அமைப்பதாக உறுதியளித்ததின்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் டிரைவர் தூக்க கலக்கத்தில் பஸ்சை ஓட்டி வந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோத இருந்தது. சுதாரித்துக்கொண்ட டிரைவர் பஸ்சை இடதுபுறமாக திருப்பும்போது சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்தில் படுகாயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், கலெக்டர் ஞானசேகரன், எஸ்.பி. முத்தரசி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.