கருப்பினத்தவர் கொல்லப்பட்டதால் வன்முறை அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்
4/28/2015 2:33:07 PM
மேரிலேண்ட்: போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த கருப்பினத்தை சேர்ந்த வாலிபர் இறந்ததால் அமெரிக்காவின் மேரிலேண்டில் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியை சேர்ந்தவர் ப்ரெட்டி கிரே. வழக்கு ஒன்றில் கடந்த 12ம் தேதியன்று கிரேவை போலீசார் கைது செய்தனர். காவலில் இருந்த கிரேவை போலீசார் தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். போலீசார் அடித்து துன்புறுத்தியதால் அவர் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், கிரேவின் இறுதி சடங்கு நேற்று பால்டிமோர் பகுதியில் நடந்தது. கருப்பினத்தை சேர்ந்தவர்கள் மீது போலீசார் அடிக்கடி தாக்குதலில் ஈடுபவடுவதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பால்டிமோரில் உள்ள ஒரு மாலில் திடீரென சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த வன்முறை மற்ற பகுதிகளுக்கும் பரவியது. ஆங்காங்கே கல்வீச்சு, வாகனங்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்தன. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் முயன்றும் பயனில்லை. இந்நிலையில், மேரிலேண்ட் கவர்னர் லாரிஹோகன்,அவசர நிலை உத்தரவு பிறப்பித்தார். ஆர்ப்பாட்டகாரர்களின் வன்முறையால் அப்பாவி மக்கள், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார். வன்முறையை ஒடுக்க தேசிய பாதுகாப்பு படையின் உதவியை அவர் கோரினார். இதையடுத்து, மேரிலேண்ட் பகுதிகளில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கருப்பினத்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.