தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
9/23/2021 4:57:32 PM
சென்னை: தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்கும் திட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கத்தில் இன்று நடைபெற்றது. திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தலைமை செயலாளர் இறையன்பு, மின்வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஏழையின் சிரிப்பிலே இறைவனை காண்போம் என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா. இன்று லட்சக்கணக்கான உழவர்கள் முகத்தில் மலர்ச்சியை உருவாக்கக்கூடிய வகையில் ஒரு திட்டமாக, அந்த திட்டத்தை விழா நடத்தி வெளிப்படுத்தக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
கடந்த மே மாதம் 7ம் நாள் நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றேன் என்று சொல்ல மாட்டேன். பொறுப்பை ஏற்றேன் என்று சொல்வேன். அதுதான் சாலச்சிறந்ததாக இருக்கும். அன்று முதல் இன்று வரை நாள் தோறும் ஏராளமான திட்டங்கள் அரசின் சார்பிலே அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை தொடங்கி வைப்பது, அந்த திட்டங்கள் மக்களுடைய பயன்பாட்டிற்கு போகக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பது தான் அரசின் திட்டமாக அமைந்திருக்கிறது. அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக்கூடிய அனைத்து அமைச்சர்களும் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் தேதியை உடனடியாக வழங்க முடியாத சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. ஏராளமான திட்டங்களை தொடங்கிகொண்டிருக்கிறார்கள். அப்படி தொடங்கக்கூடிய திட்டங்களில் வேகமாக செயல்பட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி என்னிடம் தேதி வாங்கி இந்த திட்டத்தை தொடங்கி விட்டார். அதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜியை மனதார பாராட்டுகிறேன். சில திட்டங்கள் அந்த நேரத்திற்கு தேவையானதாக இருக்கும்.
சில திட்டங்கள் ஆண்டுகளுக்கு தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள் தலைமுறை தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில் தான், தலைமுறை தலைமுறைக்கு பயனளிக்கக்கூடிய திட்டமாக இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டமாக இது தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் மகத்தான திட்டம் தான் இந்த திட்டம். 2 லட்சத்து 9 ஆயிரத்து 910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது. ஆனால், 2011-2016 அதிமுக ஆட்சியில் 82,987 பேருக்கும், 2016-21 அதிமுக ஆட்சியில் 1,38,592 பேருக்கு தான் புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது. அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் இருந்த வேறுபாடு இதுதான். இதை தான் நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். 10 ஆண்டுகாலத்தில் வெறும் 2 லட்சம் இணைப்புகள் தான் அதிமுக ஆட்சியில் தரப்பட்டது. ஆனால், நான் ஆட்சி பொறுப்பிற்கு வந்து 4 மாதத்திலே 1 லட்சம் இணைப்புகளை இப்போது கொடுக்க உள்ளோம். பெருமையாக சொன்னால் இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. திமுக ஆட்சி என்பது உழவர்களின் ஆட்சியாக, வேளாண்மை புரட்சியின் ஆட்சியாக தான் எப்போதும் உள்ளது.
இந்த மண்ணையும், மக்களையும் காப்பதில் யாருக்கும் சளைக்காதவர்கள் தான் திமுக என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, சில நாட்களுக்கு முன்பு விவசாய சங்க பிரதிநிதிகளை சேர்ந்தவர் இங்கே பேசும் போது குறிப்பிட்டு சொன்னார், தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக துணிச்சலாக, ஒன்றிய அரசின் மீது பயம் இல்லாமல் ஒன்றிய அரசை எச்சரிக்கக்கூடிய வகையில் சட்டமன்றத்திலேயே தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம். இதை உழவர் பெருங்குடி மக்கள் நிச்சயம் மறக்கமாட்டார்கள். காவிரி பங்கீடு போன்ற பெரிய பிரச்னையாக இருந்தாலும், வேளாண் மக்களின் சிறு கோரிக்கையாக இருந்தாலும் அதற்கு உடனடியாக செவி மடுத்து நிறைவேற்றித்தரக்கூடிய ஆட்சி தான் திமுகவின் ஆட்சி. நான் பிறந்தபோது தான் காவிரி ஒப்பந்தம் உருவானது என்று தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அந்த காவிரி பிரச்னையை தீர்க்க முழு முயற்சி எடுத்தவர் தான் கலைஞர். காவிரி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றினார்கள்.
அன்றைக்கு பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் வலியுறுத்தி காவிரி நடுவர் மன்றத்தை 1990ம் ஆண்டு அமைக்க வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இறுதி தீர்ப்பிற்கு முன் இடைக்கால தீர்ப்பை பெற்றவர் நமது தலைவர் கலைஞர். பிரதமர் வாஜ்பாயை வற்புறுத்தி 1998ம் ஆண்டு காவிரி கண்காணிப்பு ஆணையம் அமைக்க காரணமாக இருந்தவர் முத்தமிழஞர் கலைஞர். 2007ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது தான் காவிரி இறுதி தீர்ப்பும் வந்தது. 192 டி.எம்.சி மட்டுமே என்றுதான் தீர்ப்பு வந்தது. 2006ம் ஆண்டு தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய வகையிலே, கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கிய 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை ரத்து செய்ததும் கலைஞரின் ஆட்சிகாலத்தில் தான். பதவியேற்ற அன்றே, கோட்டையில் உள்ள கோப்பை விழா மேடைக்கு வரவழைத்து, விழா மேடையிலேயே கையெழுத்துப்போட்டு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். நிலமற்ற ஏழை உழவு தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குவேன் என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் நிலமும் வழங்கப்பட்டது. 1,89,719 ஏக்கர் நிலத்தை 1,50,159 பேருக்கு வழங்கிய ஆட்சி தான் கலைஞரின் ஆட்சி. இவை அனைத்திற்கும் மேலாக உழவர்களுக்கு இலவச மின்சாரம் அறிவித்ததும் கலைஞர் தான்.
1978ம் ஆண்டு முதல் உழவர்கள் மின் கட்டணத்தில் சலுகை கேட்டு போராடினார்கள். 1990ம் ஆண்டு மின்கட்டணத்தில் 1 பைசா கூட தரவேண்டியது இல்லை என்று அந்த திட்டத்தை அறிவித்தார். இந்த வரிசையில் தான் 1 லட்சம் புதிய இணைப்புகள் என்ற புதிய திட்டத்தை நாம் தொடங்கி வைத்துள்ளோம். ஒரு லட்சம் புதிய இணைப்புகளை வழங்குகிறோம். அதிலும் பெரும்பாலும் இலவசமாக வழங்குகிறோம் என்றால் தமிழ்நாடு மின்சார வாரியம் செழிப்பாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் இதை சீரழித்து விட்டு சென்றிருக்கிறார்கள். இது தான் அதிமுக ஆட்சியின் சாதனை. 1.59 லட்சம் கோடி ரூபாய்க்கு கடனில் இருக்கிறது மின்சார வாரியம். ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது. இதைவிட கொடுமை என்னவென்றால் அனல்மின் நிலையங்களில் பதிவேட்டில் இருப்பதும், இருப்பில் இருப்பதும் வேறுபட்டதாக இருக்கிறது. அதிலும் முறைகேடுகள். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பராமரிப்பு பணிகளே நடைபெறவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார வாரியத்தின் அவலங்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம். இதிலிருந்து மின்சார வாரியத்தை காப்பாற்றுவதற்கான பணிகள் தொடங்கி இருக்கிறது.
புதிய மின் திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். 17,980 மெகா வாட் மின்சாரத்தை வரும் 10 ஆண்டுகாலத்தில் தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கி இருக்கிறது. சூரிய சக்தி மின் தயாரிப்பிற்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம். திருவாரூரில் முதல் சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. மரபு சாரா எரிசக்தி துறையில் இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை போட்ட ஒரே மாநிலம் நமது தமிழ்நாடு தான் என்பதை பெருமையோடு சொல்லலாம். மின் இணைப்பை சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. நுகர்வோர் குறைகளை உடனடியாக தீர்த்து வருகிறோம். ‘மின்னகம்‘ என்ற குறை தீர்வு மையத்தை தொடங்கி வைத்தேன். இதில் பதியப்பட்ட புகார்களில் 90 சதவீதத்திற்கும் மேல் தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களோடு நேரடியாக இருக்கும் துறை மின்சாரத்துறை. இன்றைக்கு புதிய மின் இணைப்பு பெற்றவர்கள் மின்சார தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். மின்சாரத்தயாரிப்பு என்பது மிகப்பெரிய செலவழிக்கக்கூடிய திட்டமாக இருக்கிறது. முடிந்த அளவிற்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள். உழவு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணையை வழங்கியிருக்கிறோம். இவ்வாறு பேசினார். தமிழகத்தில் ஏற்கனவே விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. அதுபோலவே, புதிதாக 1 லட்சம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மின் இணைப்புகளுக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.