மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
9/20/2021 5:12:37 PM
சென்னை: மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலை நடத்துவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஊராட்சி ஒன்றிய, கிராமப்புற ஊரக உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள், மாநகராட்சி அமைப்புகள் எனத் தனித் தனியாக 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி மற்றும் வேலூர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களின் வார்டு வரையறை முடிக்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டதால், இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராமப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தி முடித்தது.
இந்த நிலையில் சங்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,” ஊரக உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு மற்றும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வார்டு மறுவரையறையை தெளிவுபடுத்திய பின்னர் உள்ளாட்சி தேர்தலை தமிழகத்தில் நடத்த வேண்டும். அதுவரை புதியதாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலே நடத்த வேண்டும்.
இதில் புதியதாக உருவக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு 3 மாதத்தில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை விரைந்து முடித்து அதற்கும் தேர்தலை நடத்த வேண்டும். இதுகுறித்த அனைத்து பணிகளையும் மறுவரையறை ஆணையம் கண்காணிக்கும் என கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால், கொரோனா நோய் தொற்றை அடிப்படையாக கொண்டு கால அவகாசம் வேண்டும் என்று மாநிலம் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்துவதற்கான தேதியை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.
இறுதியாக இந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 23ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ”தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணியானது முடியும் நிலையில் உள்ளது. கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக தாமதம் ஆகியுள்ளது.
விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலை நடத்த 7 மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சூர்யகாந்த் மற்றும் ஹேமா கோலி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6ம் தேதி மற்றும் 12ம் தேதிகளில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தப்படாத மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும்.
ஏற்கனவே 7 மாதங்கள் அவகாசம் கேட்டிருந்தோம். தற்போது 4 மாதங்கள் அவகாசம் தர வேண்டும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், நாடாளுமன்றத்திற்கும், சட்ட மன்றத்திற்கும் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் மட்டும் ஏன் தாமதம் செய்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?. நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலை நடத்துவதில் எந்த கால அவகாசமும் தர முடியாது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் குறித்து 2 நாட்களில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.