உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகல்: எடப்பாடி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் தாக்கு
9/15/2021 4:54:30 PM
சென்னை: தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. சொந்தக் கட்சிகாரர்களை கட்டுப்படுத்த முடியாதவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவோடு கூட்டணி வைத்தால் வெற்றி பெறமுடியுமா? கடந்த தேர்தலின் போது கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை, கூட்டணி வைத்தால் நமக்கு உரிய இடம் கிடைக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் பாமக நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலையில் நேற்று இணைய வழியில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் பாமக தலைவர் ஜி.கே. மணி நேற்று இரவு தெரிவித்தார். இதையடுத்து ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து இன்று, நாளை விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்கள் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். மேலும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மற்றும் கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் என 22 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவாதிக்கப்பட்டவையாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடரலமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வடமாவட்டங்களில் வருவதால் பாமகவிற்கு செல்வாக்கு உள்ள பகுதிகள் என்பதால் தனித்து போட்டியிடலாம்.
மேலும் கடந்த தேர்தலின் போது அதிமுகவினர் ஒத்துழைப்பு தரவில்லை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, கடந்த 28 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கடலூர், திருவண்ணாமலையில் செல்வாக்கான பகுதிகளில் போட்டியிட்ட போது அதிமுகவினர் சீட் கிடைக்காதவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். அவர்களை வாபஸ் பெற வைக்க அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியால் முடியவில்லை, சொந்தக் கட்சிக்காரர்களை கூட கட்டுப்படுத்த முடியவில்லை.
அவர்களுடன் தற்போது கூட்டணி வைத்தால் நாம் வெற்றி பெறமுடியுமா? தற்போது உள்ள சூழ்நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்தால் நமக்கு சரி வராது, குறிப்பிட்ட சீட் கிடைக்காது. அதனால் தனத்தே போட்டியிடலாம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட இடங்களில் வென்று பாமக வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம். பாமகவால் கூட்டணிக் கட்சிகள் பலனடைந்தது. கூட்டணியால் பாமகவுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் 9 மாவட்டங்களில் தனித்தே போட்டியிடலாம் என்ற அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.