ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை திறந்த நிலையில் 8ம் வகுப்புவரை பள்ளி திறப்பது எப்போது?.. சென்னையில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு
9/14/2021 4:59:24 PM
சென்னை: கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்து வருகிறது. கூட்டத்துக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட இருக்கிறார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை கொரோனா தொற்றின் பாதிப்பு நீடித்து வந்தது.
இருப்பினும் இன்னும் இரண்டாம் கட்ட தொற்று பாதிப்பு இருப்பதை அடுத்து பள்ளிகளை திறப்பது குறித்த அரசு முடிவு எடுக்கவில்லை. இதற்கிடையே, 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வகை மாணவர்கள் மட்டுமே தற்போது பள்ளிகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி பாடப் பகுதிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையடுத்து அந்த மாணவர்களுக்கு வகுப்பு தொடங்குவது குறித்து இரண்டு முறை ஆய்வுக் கூட்டங்களை பள்ளிக் கல்வித்துறை நடத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கொண்ட ஆய்வுக்கூட்டம் சென்னையில் இன்று காலை முதல் நடந்து வருகிறது. அதில் அந்தந்த மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்த நிலவரங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இதையடுத்து இன்று மாலையில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிகள் திறப்பது குறித்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இன்று காலையில் அமைச்சர் கூறியதாவது: தற்போது 9 முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடக்கிறது. அவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் தான் அனுமதிக்கப்படுகின்றனர். 9 மற்றும் 10ம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகள் காலியாக இருப்பதால் அங்கு அவர்களுக்கு பாடம் நடத்தப்படும்.
முழு வீச்சில் அனைத்து வகுப்புகளுக்கும் தொடங்கும் போது, ஒரு வகுப்புக்கு 20 பேர் என்ற அடிப்படையில், நடத்தப்படும். சுழற்சி முறையிலும் நடத்தப்படும். கல்வி டிவி, மூலமாகவும் பாடம் நடத்தப்படும். நீட் தேர்வு விலக்கு குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களை பாதிக்காத வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தம் குறைக்க பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் கவுன்சலிங் அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.