நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது: குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
9/14/2021 4:57:13 PM
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா தமிழக ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளநிலை படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் ஆகியவற்றிற்கு 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதற்கான முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த புதிய சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்ட மசோதா நேற்றே தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோலவே முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு விலக்கு சட்ட மசோதா நேற்றைக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த சட்ட மசோதாவில் இருக்கிற இன்னொரு கூடுதல் சட்டரீதியான வலு என்னவென்றால், ஏற்கனவே அனுப்பப்பட்ட 2017ம் ஆண்டு சட்ட முன்வடிவிற்கும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்ட முன்வடிவிற்கும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது.
குறிப்பாக, 2017ல் முன்மொழியப்பட்ட அந்த சட்ட முன்வடிவு உரிய தளர்வுகளை விரிவாக ஆராயாமல் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்ட முடிவானது நீட் தேர்வு முறையால் சமுதாய த்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற பாதிப்புகளை சரி செய்வதற்கு இந்தமுறை மாற்றாக அனைவரும் பயன்பெற தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றியும், அவற்றுக்கான சட்ட வழிமுறைகளை பற்றியும் முழுமையாக ஆராய்ந்து பரிந்துரை அளிக்க வேண்டும் என்று ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனை தலைவராக கொண்டு, கல்வியாளர்களை கொண்டு உயர்மட்ட குழு அமைத்தது.
அந்த உயர்மட்ட குழு 86 ஆயிரம் பேருக்கும் அதிகமானோரிடம் கருத்து கேட்டது. சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அதன்பிறகே சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, சட்டமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. நிச்சயம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக முதல்வர் தொடர்ந்து அதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். நேற்றைக்கு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் கையெழுத்துக்காக நேற்றைக்கே அந்த சட்டமுன்வடிவு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர் கையெழுத்து போட்டதும், அந்த சட்ட முன்வடிவு குடியரசு தலைவருக்கு போகும். குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் கொடுக்கும் அழுத்தம், வலியுறுத்தல் காரணமாக தீர்மானம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
17ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
பள்ளி கூடங்கள் திறக்க ஆரம்பித்து 15 நாள் ஆகியுள்ளது. இந்த நாட்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உண்மை. உடனடியாக அந்த பள்ளிகள் மூடப்பட்டு, விதிமுறைகள் சரியாக எடுக்கப்பட்டது. கொரோனா பாதித்த எல்லா மாணவர்களும் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் நன்றாக உள்ளனர். மாணவர்கள் மத்தியில் அச்சமற்ற சூழல் உருவாகியுள்ளது, மகிழ்ச்சியாக உள்ளனர். ஒன்றரை ஆண்டுகள், கல்வி கனவு தகர்ந்து போய் விடுமே என்ற பயத்தில் இருந்த மாணவர்கள் தற்போது உற்சாகமாக பள்ளிக்கு வருகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. 40 ஆயிரம் முகாமில், தடுப்பூசி திருவிழாவாகவே நடந்தது. இதுபோன்று வாரம் ஒருமுறை, 10 நாட்களுக்கு ஒருமுறை முகாம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். வாரம் 50 லட்சம் தடுப்பூசி கேட்டுள்ளோம். இன்று வரை 17 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. வருகிற 17ம் தேதி மீண்டும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.