ஒரே ஆண்டில் 43,000 போக்சோ வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்
8/25/2021 5:00:01 PM
புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே ஆண்டில் போக்சோ சட்டத்தின்கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆடையணிந்த சிறுமியை தொட்டது பாலியல் சீண்டலாகாது என தெரிவித்து குற்றம்சாட்டப்பட்ட நபர் சதீஷை மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், அஜய் ரஸ்தோகி அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய விசாரணையின்போது ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, ஒருவர் மருத்துவ அறுவை சிகிச்சைக்கான கையுறை அணிந்துகொண்டு ஒரு பெண்ணின் முழு உடலையும் தொட்டால், மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பாலியல் சீண்டல் ஆகாது; அதற்காக அந்த நபர் தண்டிக்கப்படமாட்டார். உடலோடு உடல் தொடும்போது மட்டுமே பாலியல் சீண்டல் என்றாகிவிடும்.
நாடு முழுவதும் ஒரே ஆண்டில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததைத் தொடர்ந்து, அவர் சார்பில் வக்கீல் ஒருவர் ஆஜராக உச்சநீதிமன்ற சட்டப்பணிகள் குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தது.