நடிகை மீரா மிதுனை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை: எம்கேபி.நகர் போலீசார் மனு
8/24/2021 4:44:26 PM
பெரம்பூர்: நடிகை மீராமிதுனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எம்கேபி.நகர் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி எம்கேபி.நகரை சேர்ந்தவர் ஜோ மைக்கேல் பிரவீன். இவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி எம்கேபி.நகர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘’நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன், பேஸ்புக் மற்றும் இன்ஸ்ராகிராம் ஆகியவற்றில் எனது பெயரையும் புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்தி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஜோ மைக்கேல் பிரவீன் வழக்கும் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ‘’நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று எம்கேபி.நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்படி அவதூறு பரப்பியது, சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் நடிகை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீராமிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே மீரா மிதுனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று எம்கேபி. நகர் போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.