ஆலோசகர், ஆலோசனை முகவர் பணிக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
8/18/2021 5:25:51 PM
சென்னை: வெளிநாட்டில் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான ஆலோசகர்கள், ஆலோசனை முகவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பெருமளவில் இந்திய பணியாளர்களை, குறிப்பாகத் தமிழகப் பணியாளர்களை 1978ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது.
இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் விரிவாக்கும் பொருட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மனித வளத்தினை இந்நிறுவனத்திற்குப் பெற்றுத் தருவதற்கு வெளிநாட்டில் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான நடைமுறைகள் அறிந்த ஆலோசகர்கள், ஆலோசனை முகவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திப் பெருமளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளது. ஆலோசகர்கள், ஆலோசனை முகவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான விரிவான விதிமுறைகள் அடங்கிய விவரங்கள் www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள ஆலோசகர்கள், ஆலோசனை முகவர்கள் இந்நிறுவன வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள படிவங்களைப் பூர்த்தி செய்து வருகிற 31ம் தேதிக்குள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) எண்.42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.