சட்ட விரோதமாக கடத்தல்: 14 கோயில் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா: தமிழக கோயில் சிலைகளும் மீட்பு
7/29/2021 5:11:07 PM
சென்னை: இந்தியா முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து திருடிச்சென்று ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட 14 சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதில் தமிழக கோயில் சிலைகளும் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பழமையான சிலைகள், கலைப்பொருட்களுக்கு வெளிநாடுகளில் ஏக மதிப்பு. இதைப்பயன்படுத்தி கிராம கோயில்களில், பழமையான கோயில்களில் உள்ள சிலைகளை, கலைப்பொருட்களை குறிவைத்து ஒரு கும்பல் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்து வந்தது. இவர்கள் கலைப்பொருட்கள் விற்பனை மையம் என்ற போர்வையில் மறைமுகமாக சிலைக்கடத்தல் வேலைகளை செய்து வந்தனர். இந்த கும்பலில் பிரதானமானவர் தீனதயாளன். இவருக்கு தமிழ் நாட்டிலுள்ள பழமையான தொன்மையான சிலைகள் அத்துப்படி. இவருடைய கூட்டாளிகள் ஒருவர் சுபாஷ் சந்திர கபூர், சிலைக்கடத்தல் மன்னன் என அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர கபூர் நூற்றுக்கணக்கான சிலைகளை கடத்தி பலமுறை கைதான நபர். இவர்கள் இருவர் தவிர வேறு பலரும் சிலைகடத்தல் தொழிலில் உள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர கபூர்(71). அமெரிக்க குடியுரிமை பெற்று, வாஷிங்டனில் வசித்தார். அங்கு கலைப் பொருட்கள் கண்காட்சிக் கூடம் நடத்தினார். இதில், இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 20 சிலைகள் இடம் பெற்றன. சுபாஷ் கபூர் மீது சிலை திருட்டு, கடத்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல், கூட்டுச்சதி பிரிவுகளில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீசார், 2008ல் வழக்குப் பதிந்தனர். அவரை தேடப்படும் நபராக, 2011ல் மத்திய அரசு அறிவித்தது. 2012ல் ஜெர்மனியில் கைதான அவர், இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது புழல் சிறையில் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் உள்ள சுபாஷ் கபூர் வெளியே வரவில்லை. சுபாஷ் கபூர், தீனதயாளன் உள்ளிட்ட அவர்களது கூட்டாளிகள் இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் உள்ள தொன்மையான சிலைகளை கடத்தி விற்பனை செய்துவருவதால் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு பல நாடுகளில் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சர்வதேச அளவில் ரூ.900 கோடி மதிப்புள்ள 2,900 சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு நியூயார்க் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், சுபாஷ் கபூர் பிரதான குற்றவாளி, கபூரின் கூட்டாளிகள் தீனதயாளன், சஞ்சீவி அசோகன், ரஞ்சித் கன்வர், ஆதித்ய பிரகாஷ், ரிச்சர்டுசாலமன், வல்லபபிரகாஷ், நெயில், பெர்ரி ஸ்மித் ஆகியோரும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில் மேற்கண்ட அனைவரையும் கைது செய்து ஆஜர்படுத்த நியூயார்க் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களில் சஞ்சீவி, அசோகன், தீனதயாளன், சுபாஷ் கபூர் உள்ளிட்டோர் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில் சுபாஷ்கபூரால் விற்கப்பட்டு ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்கால சிலைகள் உள்பட 14 கலைப் பொருட்களை இந்திய அரசிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோயில்களிலிருந்து 1960ல் கடத்தப்பட்ட நின்ற கோலத்தில் உள்ள ஞானசம்பந்தர் சிலை மற்றும் நடனகோலத்தில் உள்ள ஞானசம்பந்தர் சிலைகள் மற்றும் குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநில கோயில்களில் திருடப்பட்ட 6 சிலைகள் உள்பட 14 கலைப் பொருட்களை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று ஆஸ்திரேலியா கலைக்கூடம் ஒப்படைக்க உள்ளது. இதுபற்றி ஆஸ்திரேலியே அருங்காட்சியக இயக்குனர் மெர்சி கூறுகையில், இந்த அருங்காட்சியகத்தில் உள்ள 6 சிலைகள் சட்ட விரோதமாக பல கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே நல்லெண்ண அடிப்படையில் இந்த சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் உள்பட 14 பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதை ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் மான்பிரித் ஒர வரவேற்றுள்ளார்.
இந்த 14 பொருட்களும் அமெரிக்காவில் உள்ள சுபாஷ் கபூருக்கு சொந்தமான கண்காட்சி கூடத்தில் இருந்து வில்லியம் வொர்ப் என்பவர் மூலம் விற்கப்பட்டுள்ளது. சீர்காழியில் சாயவனத்தில் உள்ள சாயவனேஸ்வரர் கோயிலில் 1960ல் நின்ற மற்றும் நடன கோலத்தில் உள்ள திருஞானசம்ந்தர் சிலைகள் திருட்டு போயுள்ளது. இதுதொடர்பாக சீர்காழி போலீசில் அப்போது கோயில் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இதுபற்றி விசாரித்தனர். அதற்கான ஆதாரங்களும் கோயில் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் சிலைகள் சீர்காழி சாயவனேஸ்வரர் கோயில் சிலையாக இருக்கலாம், இந்த சிலைகள் விரைவில் சீர்காழி கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இந்தியாவின் பழமையான சிலைகள், கலைப்பொருட்களுக்கு வெளிநாடுகளில் ஏக மதிப்பு. இதைப்பயன்படுத்தி கிராம கோயில்களில், பழமையான கோயில்களில் உள்ள சிலைகளை, கலைப்பொருட்களை குறிவைத்து ஒரு கும்பல் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்து வந்தது. '