தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: எடப்பாடியில் இபிஎஸ், தேனியில் ஓபிஎஸ் பங்கேற்பு
7/28/2021 5:07:28 PM
சென்னை: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் தங்கள் வீடுகளின் முன் பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். எடப்பாடியில் இபிஎஸ், தேனியில் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை, திமுக அரசின் கவனத்திற்கு கொண்டுவர வருகின்ற 28ம் தேதி (இன்று) காலை 10 மணி அளவில் அதிமுகவினர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன் பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமை குரல்களாய் ஒலிக்க வேண்டும் என்று கடந்த வாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தலைமையில், தங்கள் வீடு முன் பதாகைகள் மற்றும் அதிமுக கொடிகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அவரது வீட்டில் எடப்பாடி பழனிசாமியும், தேனியில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோன்று முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கையில் கோரிக்கை பதாகைகளை ஏந்தி இன்று காலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக சார்பில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரச்சாரம் செய்தார்கள். திமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் திமுக இப்போது நீட் தேர்வுக்கு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, நீட் தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
மக்களின் எதிர்பார்ப்பை உடனடியாக நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். திமுக ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல் விலையை ரூ.5ம், டீசல் விலையை ரூ.4ம் குறைப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 தருவதாகவும் வாக்குறுதி அளித்தது. இதுபோன்று 55 வாக்குறுதிகள் திமுக சார்பில் தேர்தலின்போது அறிவிக்கப்பட்டது. அவைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.