தமிழகத்தில் 73 சதவீதம் வாக்குப்பதிவு..! 1.80 கோடி பேர் வாக்களிக்கவில்லை: அதிகபட்சமாக கரூரில் 83.92 சதவீதம்..!
4/7/2025 5:26:29 PM
சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 73 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் சென்னையில் மிகக் குறைவாக 59.06 சதவீத வாக்குகளும், அதிகப்பட்சமாக கரூரில் 83.92 சதவீத வாக்குகளும் பதிவாகின. தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடியே 80 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோன்று கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 3,998 பேர் போட்டியிட்டனர். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 88,937 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வாக்காளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் பயன்படுத்திய பிறகே வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தாலும், சில இடங்களில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. பின்னர் புதிய இயந்திரம் மாற்றப்பட்டு காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
அதேபோன்று, தேர்தல் ஆணையம் சார்பில் வீடுகளுக்கே சென்று பூத் சிலிப் வழங்காததால், நிறைய வாக்காளர்கள் தாங்கள் எந்த மையத்துக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்று தெரியாமல் தடுமாறினர். அவர்களுக்கு கட்சி ஏஜென்டுகள் உதவி செய்தனர். தமிழகத்தில் காலை 7 மணியில் இருந்தே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் அதிகளவு வெயில் இருந்தாலும் பொதுமக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். முதல் முறையாக வாக்களிப்பதற்காக அடையாள அட்டை பெற்ற இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். கொரோனா நோயாளிகள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி சுமார் 30 ஆயிரம் கொரோனா நோயாளிகள் உள்ளனர். ஆனாலும் அவர்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு வந்து, பிபிஇ உடை அணிந்து வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழகத்தில் நேற்று இரவு 7 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
தமிழகம் முழுவதும் 234 தொகுதி மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நேற்று இரவு 7 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு அரசியல் கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தயாராக இருந்த ஸ்டாங் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். தமிழகத்தில் மட்டும் 75 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளது. அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முன்னணி நிலவரம் 8.30 மணிக்கு தெரியவரும். தமிழகத்தில் நேற்று இரவு வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொதுவாக சின்ன சின்ன சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து மட்டுமே புகார் வந்துள்ளது. பெரிய பிரச்னை எதுவும் இல்லாமல் அமைதியாக தேர்தல் முடிந்துள்ளது.
தேர்தல் அதிகாரியிடம் எந்த புகாரும் வரவில்லை. தமிழகத்தில் 75 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளது. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று இரவு 7 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இது இறுதி நிலவரம் ஆகும். அதிகப்பட்சமாக கரூரில் 83.92 சதவீதம் வாக்குகளும், குறைந்த அளவாக சென்னையில் 59.06 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. நேற்று வாக்குப்பதிவின் போது பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. வேளச்சேரியில் விவிபேட் இயந்திரத்தை சிலர் எடுத்துச் சென்றது பற்றி தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில் சுமார் 1 கோடியே 80 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பலர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்பட்டாலும், கொரோனா தொற்று அதிகம் உள்ள நேரத்தில் 73 சதவீதம் வாக்குப்பதிவு என்பது நல்ல முன்னேற்றம் என்று தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,09,23,651 பேரும், பெண் வாக்காளர்கள் 3,19,39,112 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,192 பேரும் உள்ளனர். தமிழகம் முழுவதும் 6.28 கோடி வாக்காளர்கள் இருந்தும் நேற்று 73 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். சுமார் 1 கோடியே 80 லட்சம் லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேபோன்று, மிக குறைந்த அளவாக சென்னையில் 59.06 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதன்படி சுமார் 41 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சென்னையில் மட்டும் 40,57,061 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 19,94,505 பேரும், பெண் வாக்காளர்கள் 20,61,473 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 1,023 பேரும் உள்ளனர். அப்படி பார்க்கும்போது சுமார் 17 லட்சம் பேர் சென்னை மாவட்டத்தில் மட்டும் வாக்களிக்கவில்லை. சென்னையில் மட்டும் ஒவ்வொரு தேர்தலிலும் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் மட்டுமே பதிவாகி வருவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கருத்து கூறும்போது, ”தமிழகத்தில் சென்னையில்தான் படித்தவர்கள், படிக்காதவர்கள், அரசு பணியில் உள்ளவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் என அதிகம் பேர் வசிக்கிறார்கள். ஆனால், இவர்களில் பலரும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார்கள்.
இப்படி வீடு மாற்றும்போது தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை மாற்றுவது இல்லை. அப்படியே தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் முகாமில் வந்து விலாசம் மாற்றினாலும் அவர்களுக்கு புதிய கார்டு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. பலருக்கு தாம் எந்த பூத்தில் சென்று வாக்களிக்க வேண்டும் என்ற விவரம் கூட தெரியவில்லை. பூத் சிலிப் இவர்கள் வீடுகளுக்கு வந்து தரப்படவில்லை. இப்படி தேர்தல் ஆணையத்தின் தவறுகளே சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு தேர்தல் ஆணையம்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர். அதேநேரம் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளை தவிர கிராமப்புறங்களில் வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களிக்க ஆர்வமாக உள்ளதால் அங்கெல்லாம் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் 30 ஆயிரத்துக்கும் மேல் இருந்தாலும், அவர்களில் சில நூறு பேர் மட்டுமே வந்து வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற சில பிரச்னைகளால் தமிழகத்தில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.