வாக்குச்சாவடி மையங்களுக்கு பொதுமக்கள் மொபைல் போன் எடுத்துச் செல்லக்கூடாது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்
4/5/2025 5:27:24 PM
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நேற்றுமுன்தினம் வரை ரூ.412 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை தொகுதியில் ஒரு வீட்டில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ரூ.91.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் வைத்திருந்ததாக 28 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, யாருடைய பணம், யாருக்கு கொடுக்க திட்டமிடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. தென்காசி தொகுதியில் ரூ.45 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 7,600 லிட்டர் சாராயம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை உடனே அழிக்கப்பட்டுள்ளது. ரூ.12.17 லட்சம் பாளையங்கோட்டை தொகுதியிலும், ரூ.65 லட்சம் விருதுநகர் தொகுதியிலும், ரூ.1.03 கோடி சைதாப்பேட்டை தொகுதியிலும், ரூ.11.38 லட்சம் குறிஞ்சிப்பாடி தொகுதியிலும், ரூ.98 லட்சம் கோவை மாவட்டத்திலும் (மாநகர பகுதியில்), ரூ.1.06 கோடி வேலூர் மாவட்டத்திலும், ரூ.1.23 கோடி ஆயிரம் விளக்கு தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் பிடிப்பட்ட நபர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பான அறிக்கை வந்த பிறகு தான் முழு விவரங்களும் தெரிய வரும். அரசியல் கட்சிகள், பொதுமக்களிடம் இருந்து வரும் புகாரின் பேரில் தான் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக தான் பணப்பட்டுவாடா அதிகமாக உள்ளது. இதனால், பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த கூடுதலாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 105 தொகுதிகளில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடந்து இருப்பதாக புகார் வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தெரிய வந்தால் 1905 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஏராளமான புகார்கள் வருகிறது. சென்னையில் அதிகமாக புகார் வருகிறது. இதனால், புகார் செய்வோர் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். கண்டிப்பாக ஊழியர்கள் போனை எடுப்பார்கள். நீங்கள் பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பட்டுவாடா தொடர்பாக நாங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தினமும் அறிக்கை அளித்து வருகிறோம். அவர்கள் எந்த தொகுதியில் அதிகமாக பணப்பட்டுவாடா நடந்து இருக்கிறது என்பதை தீவிரமாக ஆய்வு செய்வார்கள். தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும். ஏதாவது ஒரு இடத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டால் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்கும். எங்களிடம் மட்டுமல்ல கண்காணிப்பாளர், செலவின பார்வையாளரிடமும் கேட்கும். தேர்தல் ஆணையம் தான் அனைத்து முடிவுகளும் எடுக்கும். 144 தடை உத்தரவு போடுவது போன்று எந்த முடிவும் எடுக்கவில்லை. தொகுதியில் வெளியாட்கள் இருக்க கூடாது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 18 டிஆர்ஓக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், அந்தந்த மாவட்ட அலுவலர்களிடம் தகவல்களை வாங்கி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிப்பார்கள். நாளை காலைக்குள் எல்லா இடத்திலும் வாக்கு இயந்திரங்கள் அந்தெந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும். நாளை (இன்று) மாலைக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று சேர்ந்து விடும். தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 10727 உள்ளது. மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 551 உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் மொபைல் போன் ெகாண்டு செல்ல அனுமதி கிடையாது.