சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
2/28/2021 5:32:47 PM
சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. வருகிற 12ம் தேதி முதல் வேட்புமனுதாக்கல் தொடங்கவுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய 19ம் தேதி கடைசி நாள் என்றும், 20ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலை அமைதியாக நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை காலை 12.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில், தேர்தல் தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கட்சியினர் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.