பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு
2/28/2021 5:31:07 PM
சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பெண் ஐ.பி.எஸ் அளித்த பாலியல் புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜேஷ்தாஸ் மீது புகார் கொடுப்பதற்காக பெண் ஐபிஎஸ் அதிகாரி தனது காரில் சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 22ம் தேதி வந்துள்ளார்.
இதை அறிந்த ராஜேஷ்தாஸ் தனக்கு நெருக்கமான ஐஜி மற்றும் ஐ.பி.எஸ்யை சமாதானம் பேச அனுப்பியுள்ளார். அவர்கள் இருவரும் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் அதிரடிப்படை காவலர்கள் மூலமாக பெண் ஐ.பி.எஸ். வந்த காரை மறித்துள்ளனர். பின்னர் புகார் கொடுக்க வேண்டாம் என்று கூறி சமாதானப்படுத்தி அவரை திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மற்றொரு உயரதிகாரியும், ஒரு டிஎஸ்பியும் சமாதானமாக போய்விடுமாறு பெண் ஐ.பி.எஸ்யிடம் வலியுறுத்தி கூறியுள்ளனர். அவரை சென்னைக்கு புகார் அளிக்க செல்லவிடாமல் தடுக்கும் விதமாக கார் சாவியையும் அவர்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உரிய விசாரணை செய்து உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகிய இருவரும் இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ெஜயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.