கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்
2/24/2021 5:01:35 PM
பூந்தமல்லி: மதுரவாயல் அருகே புளியம்பேடு பகுதியில் ஒரு வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நேற்று மாலை அம்பத்தூர் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், நேற்றிரவு சம்பவ இடத்தில் பூந்தமல்லி உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி, விற்பனை செய்து வருவது தெரியவந்தது.இதுதொடர்பாக, அந்த வீட்டில் கஞ்சா சப்ளையில் ஈடுபட்ட எஸ்ஐ மகன் உள்பட கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் நெற்குன்றத்தை சேர்ந்த சரவணகுமார் (40) என்பவருக்கு சொந்தமாக புளியம்பேடு பகுதியில் உள்ள வீட்டை, கடந்த 2 மாதங்களுக்கு முன் சிதம்பரத்தை சேர்ந்த ஹரி (28) என்ற வாலிபர் வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டில் தனது நண்பர்களான சுரேஷ், விக்னேஷ் ஆகியோர் டிராவல்ஸ் நடத்தவும், அவர்களிடம் வேலை செய்யும் 4 பேர்கள் தங்கியிருப்பார்கள் எனக் கூறி, ₹15 ஆயிரம் வாடகை பேசியிருக்கிறார் ஹரி என வீட்டு உரிமையாளர் சரவணகுமார் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, அந்த வீட்டில் வைத்து பிரித்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இக்கும்பல் கஞ்சா சப்ளையில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. தனிப்படையினரின் சோதனையின்போது, அங்கு கஞ்சா சப்ளைக்கு வாங்கி செல்ல வந்திருந்த தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜெய்சூர்யா (24), சஞ்சய் (20), மதுரையை சேர்ந்த நாத் (21), சிதம்பரம், கடவாச்சேரியை சேர்ந்த ரஞ்சித்குமார் (18), சென்னை வண்டலூரை சேர்ந்த எலக்ட்ரிஷியன் பிரசாந்த் (19), திருவாரூரை சேர்ந்த சரத்குமார் (27), சென்னை ஆவடி 5-வது பட்டாலியனில் எஸ்ஐயாகப் பணிபுரியும் விஜயலதா என்பவரின் மகனான கல்லூரி மாணவன் அருண் (20), தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரி மாணவன் சேரன் (22) ஆகிய 8 பேர் எனத் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து மேலும் ஒரு பைக், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் சிதம்பரத்தை சேர்ந்த ஹரியை சந்திக்க வந்ததாகவும், அவர் தற்போது ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கிவர சென்றிருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முக்கிய குற்றவாளியான சிதம்பரத்தை சேர்ந்த ஹரியை வலைவீசி தேடி வருகின்றனர்.