திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை
2/22/2021 5:00:27 PM
முத்துப்பேட்டை: திருவாரூர் அருகே இன்று காலை அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் மணல்மேட்டை சேர்நதவர் ராஜேஷ் (38). இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் முத்துபேட்டை ஒன்றிய கவுன்சிலராக சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்று அதன் பின் அதிமுகவில் சேர்ந்தார். இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவியும், 8 மாத குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் தனது பைக்கில் கோவிலூரிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்து விட்டு, ஆசாத்நகர் பகுதிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து ஆலங்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பேரூராட்சி குப்பை கிடங்கு எதிரே, டாஸ்மாக் கடை அருகே 3 பைக், ஒரு காரில் வந்து பதுங்கி இருந்த, 10 பேர் கொண்ட கும்பல் ராஜேஷை வழிமறித்தது. ஆனால் ராஜேஷ் நிற்காமல் வண்டியை ஓட்டினார். அவரை பின்தொடர்ந்த அந்த மர்ம கும்பல் ஆலங்காடு கயிறு ஆலை அருகே ராஜேஷின் பைக் மீது தங்களது வாகனங்களை மோதி அவரை கீழே தள்ளியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேஷ், பயத்தில் அருகில் உள்ள கருவேலகாட்டுப்பகுதிக்குள் அலறியடித்து ஓடினார். விடாமல் துரத்திய அக்கும்பல் அங்கு சுற்றி வளைத்த அவரை சரமாரி வெட்டியது. இருப்பினும், ஆத்திரம் தீராத அந்த கும்பல் அவரின் தலையை தனியே துண்டித்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ரஜேஷ்சின் அறுபட்ட தலையை ஒரு கைலிக்குள் சுற்றி அதை எடுத்துக்கொண்டு தங்கள் வாகனங்களில் அந்த கும்பல் எடுத்து சென்றது. அப்போது ஆசாத்நகர் கடைத்தெருவில் இருந்த வேகத்தடையால் கைலியில் சுற்றியிருந்த தலை நழுவி சாலையில் விழுந்தது. இதை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து கார் மற்றும் பைக்குகளில் தப்பி ஓடிவிட்டது. சாலையில் ராஜேஷின் தலை விழுந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி தேன்மொழிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேசின் தலையையும், உடலையும் மீட்க முயன்றனர். அப்போது அங்கு வந்த ராஜேஷின் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யும் வரை தலை மற்றும் உடலை எடுக்க விடமாட்டோம் என்றனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்ததையடுத்து ராஜேசின் தலையையும், உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். ராஜேஷ் உடல் கிடந்த இடத்தில் ஒரு துப்பாக்கியும் போலீசார் கைப்பற்றினர். ராஜேசின் சித்தப்பா தம்பி வீரபாண்டியன் கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். பின்னர் அதிமுக பிரமுகர் தம்பி மதன் கொலை செய்யப்பட்டார். இதற்காக பதிலாக இந்த கொலை நடந்ததா? அல்லது ராஜேஷின் மீது ஏற்கனவே உள்ள கொலை வழக்குகளுக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? என்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.