நாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி: டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை
1/24/2021 6:12:11 PM
புதுடெல்லி: டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ெடல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதையடுத்து பஞ்சாப், அரியானாவில் இருந்து டெல்லிக்கு ஏராளமான வாகனங்கள் படையெடுத்து வருவதால், போலீசார் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள், குடியரசு தினத்தன்று (நாளை மறுநாள்) டெல்லியில் ‘கிசான் கந்தந்திர பேரணி‘ என்ற பெயரில் (விவசாயிகளின் குடியரசு தினம்), டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தன.
இதற்கு இடைக்கால தடை விதிக்க மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த போது நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. தொடர்ந்து, டிராக்டர் பேரணியை நெரிசல் மிகுந்த வெளிவட்டச்சாலைக்கு பதிலாக மாற்றுப்பாதையில் நடத்துமாறு விவசாய சங்கங்களிடம் டெல்லி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் விவசாய சங்கங்கள் மறுத்து விட்டன. இருதரப்புக்கும் இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் போலீஸ் அதிகாரிகளுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது டெல்லி நகருக்குள் டிராக்டர் பேரணியை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாய சங்கத்தலைவர் அபிமன்யு கோகர் கூறுகையில், ‘டெல்லி நகரில் டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். காசிப்பூர், சிங்கு, திக்ரி, பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய எல்லைகளில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்கும். எல்லையில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு, நாளை மறுநாள் பேரணி நடத்தப்படும். மேலும், டெல்லியை சுற்றியுள்ள 100 கி.மீ தூரத்திற்கு ஐந்து வெவ்வேறு பாதைகளில் டிராக்டர் ஓட்டி வர அனுமதிக்கப்பட்டுள்ளது. டிராக்டர் அணிவகுப்பு முடிந்த பிறகு டெல்லி நகரத்தில் தங்க அனுமதி கிடையாது. மேலும் விபரங்கள் வழிகாட்டல் நெறிமுறைகள் இன்று (ஜன. 24) இறுதிசெய்யப்படும்.
குடியரசு தின பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்தவொரு வழியையும் பின்பற்றக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதற்கு விவசாயிகள் சங்கங்கள் ஒப்புக் கொண்டன. பேரணி நடத்த அனுமதி கிடைத்துள்ளதால், டெல்லி காவல்துறையும், மத்திய அரசும் விவசாயிகளின் வலிமைக்கு தலைவணங்கி உள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். பேரணியானது நாளை மறுநாள் தொடங்கி 72 மணி நேரம் வரை நீடிக்கும். எல்லைப் பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் வரும் டிராக்டர்கள், பின்னர் அணிவகுத்து மீண்டும் அவர்களின் எல்லைக்கு சென்றுவிடுவார்கள்’ என்றார்.
இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம், அரியானா மாநிலம் சிர்சா மாவட்டம் ஆகியவற்றில் இருந்து சுமார் 30 ஆயிரம் டிராக்டர்களில் மளிகை பொருட்கள், படுக்கைகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு விவசாயிகள் நேற்று டெல்லியை நோக்கி புறப்பட்டனர். சில விவசாயிகள் டீசலை மிச்சப்படுத்துவதற்காக, மற்ற விவசாயியின் டிரெய்லரில் தங்கள் டிராக்டரை ஏற்றி வைத்தும், வேறு சிலர் மற்ற டிராக்டருடன் தங்கள் டிராக்டரை கயிற்றால் இணைத்தும் கொண்டு சென்றனர். குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் ஒருபக்கம் நடைபெறும் நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணியும் நடப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், உளவுதுறை அறிக்கையின்படி எல்லைகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், குடியரசு தின விழாவிற்கான வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை காட்டிலும் கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்ய டெல்லி போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.