ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்காத பட்சத்தில் ‘பி’ திட்டம் குறித்து காங்கிரசில் தீவிர ஆலோசனை: சோனியாகாந்தி மீண்டும் தலைவராக வாய்ப்பு
12/30/2020 5:21:00 PM
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் மீண்டும் ஏற்காதபட்சத்தில் ‘பி’ திட்டம் குறித்து மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இத்திட்டத்தின்படி சோனியா காந்தி மீண்டும் தலைவராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக 2019 ஆகஸ்டில் சோனியா காந்தியை இடைக்காலத் தலைவராக கட்சி தேர்வு செய்தது. கிட்டதிட்ட 18 மாதங்களுக்கு மேலான பிறகும் கூட, காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ‘99.9 சதவீத காங்கிரஸ்காரர்கள் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வேண்டும்’ என்று விரும்புவதாக தெரிவித்தார்.
ஆனால், ராகுல் காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்க தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதிய தலைவரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்தல் தொடர்பாக தேர்தல் நடைமுறைகள் அடுத்த மாதம் (2021 - ஜனவரி) தொடங்க உள்ள நிலையில், ராகுல்காந்தி இன்றைய நிலையில் வெளிநாடு சென்றுள்ளார். தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்காதபட்சத்தில், பிரியங்கா காந்தியை முன்னிலைபடுத்த சில தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவரும் சம்மதிக்காவிட்டால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்களுக்கென ஒரு மாற்று திட்டம் ஒன்றையும் வைத்துள்ளனர். இத்திட்டம் குறித்து காங்கிரசுக்குள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ‘ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் அவர் மீண்டும் தலைவர் பதவிக்கு வர தயங்கி வருகிறார். சோனியா காந்தியின் உடல்நிலை சரியில்லாததால், கட்சியில் துணைத் தலைவர்கள் பதவிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கடந்த ஆகஸ்டில், 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் கட்சியை பலப்படுத்த தலைமைக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்குள் மாற்றுத்திட்டம் (‘பி’ திட்டம்) குறித்த விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. அதன்படி சோனியா காந்தி கட்சியின் நிரந்தர தலைவராக நீடிக்க முடியும்.
மூத்த தலைவர்கள் நான்கு பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்படுவர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் (கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு) தலா ஒரு துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த நான்கு துணைத் தலைவர்களும் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் அனைத்து முடிவுகளையும் எடுப்பார்கள். துணைத் தலைவர்கள் நான்கு பேருக்கு கீழே, மூன்று பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். எனவே, காங்கிரசின் ‘பி’ திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.