மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு; பாஜ கூட்டணிக்கு துணை போகும் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
11/21/2020 5:39:25 PM
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தகுதியும் உரிமையும் கொண்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் வாக்காளர்கள், வாக்குச்சாவடிகளில் உள்ள வெளிப்படையான வாக்குப்பதிவு முறையை சீர்குலைக்கும் வகையில், “3.10.2020 அன்று அறிவிக்கப்பட்ட பீகார் மாடல் தேர்தல் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை பார்த்து, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்போர் பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பீகார் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுள்ள கட்சியாக வெற்றி பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேர்தல் ஆணையத்தின் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை பரிசீலனை செய்து பார்த்ததற்கு பிறகு, பீகாரில் பாஜ கூட்டணியின் வெற்றியே, இன்றைக்கு நாட்டு மக்களின் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கை, “பூனை குட்டி வெளியே வந்து விட்டது” என்பதை அறிவிப்பது மட்டுமின்றி, பீகார் தேர்தலில் பாஜ கூட்டணியின் வெற்றிக்கு என்ன காரணம் என்ற திரைமறைவு மர்மமும் வெளிப்பட்டு விட்டது.
தேர்தல் ஆணையம் சொல்லும் ‘பீகார் மாடல்’ தேர்தல் என்பது என்ன? பாஜ கூட்டணிக்கு ஆதரவாக, வாக்குப்பதிவில் சாதகமான சூழலை உருவாக்க, அம்மாநில தேர்தலில் “வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள்” என்ற புதிய வகை வாக்குப்பதிவுமுறை கண்டுபிடிக்கப்பட்டு திணிக்கப்பட்டது. மூத்த குடிமக்களும், மாற்று திறனாளிகளும் இதில் அடங்குவார்கள். ஆனால் இவர்கள் குறித்த தனி வாக்காளர் பட்டியல் கிடையாது. வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வயதும், வாக்காளரே தாமாகவே கொடுப்பதுதான். அதற்குரிய ஆவணங்களை சரிபார்த்து வாக்கு பட்டியலில் வயது குறிப்பிடப்படுவதில்லை. அதைப் போல, தேர்தல் ஆணையம் ஒருவரை மாற்றுத்திறனாளி என்று எந்த வகையில் வகைப்படுத்துகிறது என்பதற்கான எவ்வித விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. எல்லாவற்றையும் விட, யார் யாரெல்லாம் இப்படி வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என்று முன்கூட்டியே தேர்தல் ஆணையம் ஒரு பட்டியலை தயார் செய்து அறிவிக்காது. இவ்வளவு குழப்பங்களும் குளறுபடிகளும் சந்தேகங்களும் நிறைந்த புதிய “தபால் வாக்களிப்பு” முறையை அறிமுகப்படுத்தி, “80 வயதிற்கு மேற்பட்டோர் எல்லாம் மூத்த குடிமக்கள். அவர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்யலாம்” என்று தேர்தல் ஆணையம் அக்டோபர் 2019ல் கூறியது.
ஆனால் பீகார் தேர்தலுக்கு முன்பு, எந்தவித முகாந்திரமும் இன்றி, இந்த “80 வயதிற்கு மேல்” என்பதை, “65 வயதிற்கு மேல் உள்ளவர்களும் தபால் வாக்களிக்கலாம்” என்று திடீரென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை கண்டு, அனைத்து கட்சிகளும் வெகுண்டு எழுந்தன. திமுகவும் கடுமையாக எதிர்த்தது. இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று நானும் கோரிக்கை விடுத்தேன். பலத்த எதிர்ப்பின் விளைவாக, “80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே தபால் வாக்குகள் பதிவு செய்யும் வாய்ப்பு “ என்று தேர்தல் ஆணையம் 16.7.2025 அன்று அறிவித்தது. அந்த “பீகார் மாடல்தான்”, பீகாரில் ஜனநாயகத்தின் சுவாசக்காற்றை மாசுபடுத்தி, நாடு முழுவதும் இன்றைக்கு பாஜ.வின் பீகார் தேர்தல் வெற்றி குறித்து மிகப்பெரிய அய்யப்பாட்டை - அதிர்ச்சி தரத்தக்க குற்றச்சாட்டுகளை பொதுவெளிக்கு கொண்டு வருவதற்கு அடிப்படையாக அமைந்து விட்டது.
இந்த நடைமுறைகளை கடைப்பிடியுங்கள்” என்றுதான், இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கு வழங்கப்படும் இந்த புதிய “தபால் வாக்கு முறை” என்பது, பூத் லெவல் அதிகாரி, அந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர் வீட்டிற்கு போவார். அவரிடம் தபால் வாக்கு சீட்டை கொடுப்பார். அவருடைய வாக்குகளை பதிய பெற்று, அந்த வாக்குச்சீட்டை திரும்ப வாங்கி வந்து, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார். ஒருவேளை அந்த வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், மீண்டும் 5 நாட்களுக்குள் சென்று, தபால் வாக்குகளை சேகரிக்க வேண்டும். அத்தகைய தபால் வாக்குகள் பற்றிய விவரங்கள், தேர்தல் அதிகாரியிடம் பூத் லெவல் அதிகாரி கொடுத்து வைத்துள்ள தபால் வாக்குகளின் விவரங்கள், முன்கூட்டியே அரசியல் கட்சிகளுக்கு தெரியப்படுத்தப்பட மாட்டாது. வாக்களிப்பது ஒருவருடையை ரகசியமான தனிப்பட்ட உரிமை. அதை பாதிக்கும் வகையில், நேரடியாக தபால் வாக்கு சீட்டுக்களை கொண்டு போய் கொடுத்து, வாக்குகள் பதிந்து பெறுவது என்பது, ரகசியமான - சுதந்திரமான வாக்கெடுப்பு முறையையும், ஜனநாயகத்தையும், பார்வைக்கு வைக்கப்படும் கடை பொருள்களாக்கி, கேலிக்கூத்தாக்கி விடும். கடும் விளைவுகள் குறித்து கவலைப்படாமல், இந்திய தேர்தல் ஆணையமே, இந்த வாக்களிப்பு முறையை ஊக்குவிப்பது கவலையளிக்கிறது.
தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சமகளம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முதன்மை பணி மற்றும் நோக்கம். அதுதான் ஜனநாயகத்தின் ஆணிவேரை பாதுகாக்கும் முக்கிய பணி. அந்த புனிதமான தேர்தல் கடமையை தாரைவார்த்து விட்டு, ஒவ்வொரு தேர்தலிலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என்று வாக்களிக்க வராத 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை, ஜனநாயக விரோதமாக பாஜவும் - அதன் கூட்டணி கட்சிகளும் பகிரங்கமாக அபகரித்து கொள்ளும் இந்த முயற்சிக்கு தேர்தல் ஆணையமே துணை போவது பேராபத்தான போக்கு. ஒருவர் வாக்கு செலுத்துவதை, இன்னொருவர் பார்க்க கூடாது என்பது தேர்தலின் அடிப்படை அம்சம். அந்த வகையில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவின் ரகசியத்தை, அந்த போற்றத்தக்க ஜனநாயக முறையின் உயிர்நாடியை நசுக்கும் செயலாக “வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கு” தபால் வாக்கு அளிக்கும் நடைமுறை இருக்கிறது. இது கொரோனாவை விட கொடுமையானது.
வாக்குச் சீட்டுகளை மூத்த குடிமக்கள் வீட்டிற்கு கொண்டு செல்லும் “பூத் லெவல் ஆபிசர்” - பிறகு அதை சேகரிக்க போகும் தேர்தல் ஊழியர்கள் அறிகுறி இல்லாத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உயிருக்கு என்ன பாதுகாப்பு? என்ன உத்தரவாதம்? அந்த வாக்காளருக்கே தொற்று இருந்தால், அங்கு போகும் தேர்தல் ஊழியர்களுக்கு என்ன பாதுகாப்பு? வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கு, தபால் வாக்கிற்காக, தனியாக வாக்குச்சீட்டுகளை அச்சடிப்பது யாருடைய வரிப்பணம்? ஆகவே, இந்த புதிய தபால் வாக்களிக்கும் முறை, இந்திய தேர்தல் ஜனநாயகம் இதுவரை வலியுறுத்தி வந்த “சுதந்திரமான - நேர்மையான” தேர்தலுக்கு விரோதமானது என்பதை விட; மக்கள் வரிப்பணத்தை தேவையில்லாமல் விரயம் செய்து, பாஜவுக்கோ, அதன் கூட்டணி கட்சிகளுக்கோ, உதவிட முனையும் போக்காகும். சமமற்ற தேர்தல் களத்தை உருவாக்கிட - தேர்தல் முடிவுகளை திரித்து சிதைத்திட - இந்திய தேர்தல் ஆணையமே களமிறங்குவது நம் தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மிகப்பெரிய அளவில் சேதப்படுத்திவிடும். அதுமட்டுமின்றி - மக்களின் விலைமதிப்பற்ற - ரகசிய வாக்குப்பதிவு முறையை சவக்குழியில் தள்ளி - புதைத்து விடும் பேராபத்தை ஏற்படுத்தி விடும்.
ஆகவே “வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வராதவர்கள்” என்று கூறி; 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும்- மாற்றுதிறனாளிகளுக்கும், சலுகை அளிப்பது போன்று “தபால் வாக்களிக்கும்” முறை என்ற ‘பாச கயிறை’ அறிமுகப்படுத்தி - தமிழகத்தில் பாஜவுக்கும் - அதன் கூட்டணி கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான முயற்சிகளில், நடுநிலைமையுடன் செயல்பட வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம், அந்த அறிவிப்பை முதலில் கைவிட்டு, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு 3.10.2025 அன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்தல் நடைமுறைகளுக்கு மாறான “தபால் வாக்கு அளிக்கும்” வாய்ப்பினை, எவ்வித வெளிப்படையான நடைமுறைகளுமின்றி கொடுப்பது குறித்து, முதலில் பாராளுமன்றத்தில் விவாதித்து - பிறகு அதை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டறிய வேண்டும். இந்த மாற்றங்கள் ஆரோக்கியமான தேர்தல் ஜனநாயகத்தை - அதன் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.