அமித்ஷா நாளை சென்னை வருகை; இபிஎஸ்-ஓபிஎஸ் நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலோசனை: தொகுதிப் பங்கீடு குறித்து பாஜவுடன் நாளை பேச்சு
11/20/2020 5:09:25 PM
சென்னை: சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களை கேட்டு நெருக்கடி கொடுக்கும் நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று மாலை அவசர ஆலோசனை நடத்துகின்றனர். இது கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா நாளை (21ம் தேதி) சென்னை வருகிறார். அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்ேதக்கத் திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம்,
கோயம்புத்தூர், அவினாசி சாலையில் ரூ.1,620 கோவியில் உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம், நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், சென்னை வர்த்தக மையம் ரூ.309 கோவியில் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ.900 கோடியில் பெட்ேராலிய முனையம், அமுல்லைவாயல் ரூ.1,400 கோவியில் லூப் பிளானட் அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் சம்பத் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து அதிமுக எம்எல்ஏக்களுக்கும் கட்சித் தலைமை அவசர உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவது முக்கியத்துவமான ஒன்றாக அரசியல் நோக்கர்கர் கருதுகின்றனர். இதற்கு எப்போதும் தமிழகம் பாஜகவுக்கு சவாலாக இருப்பதே காரணமாகும்.
மேலும் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் நோட்டாவை விட அதிக ஓட்டுக்கள் வாங்க முடியாது என்பதால், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக விரும்புகிறது. ஆனால் மற்றொருபுறம் கடந்த மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தயங்குகிறது. இதனால் இருகட்சிகளுக்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனால் அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்த மொத்த பட்டியல்கள் தற்போது பாஜக மேலிடத்தில் உள்ளது. இதனால் அக்கட்சி சொல்வதை கேட்கும் நிலையில் அதிமுக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிமுக கூட்டணியில் 60 தொகுதிகள் கேட்டு 50 இடங்களில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளது.
துணை முதல்வர் பதவியும் வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியுள்ளது. கூட்டணி இந்த முறை வெற்றி பெறாவிட்டாலும், அதிமுகவிடம் அதிக சீட் வாங்கினால்தான் பாஜகவுக்கு கவுரவமான நிலை ஏற்படும் என்று அக்கட்சி தலைமை கருதுகிறது. இதனால், தொகுதிகள் குறித்து அமித்ஷா முதல்வரிடம் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நாளை இரவு ஆலோசனையும் நடத்துகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் 50 தொகுதிகள், துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கத் தொடங்கியுள்ளது.
தற்போது பாஜகவும் 50 தொகுதிகள் கேட்கத் தொடங்கியுள்ளதும், அதற்காக அமித்ஷா சென்னை வருவதும் அதிமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.