அரபிக்கடலில் காற்றழுத்தம் தமிழகத்தில் 23ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
11/19/2020 5:21:01 PM
சென்னை: தமிழகத்தில் வரும் 23ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பல மாவட்டங்களில் ஏரி, குளம் மற்றும் அணைகள் நிரம்பி வருகிறது. இதேபோல், தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில், குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இது தென்கிழக்கு அரபிக்கடல் வரை பரவியுள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் 23ம் தேதி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுவை,காரைக்கால் மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.