கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் 8 மாதங்களுக்கு பிறகு கர்நாடகாவில் கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் வருகை சரிவு
11/18/2020 5:20:37 PM
பெங்களூரு: கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் கர்நாடகாவில் நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டது. இருப்பினும் தொற்று பயத்தில் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை. குறைந்தளவில் வருகை இருந்தது. கொரோனா வைரசால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது, கர்நாடகாவில் தொற்று பரவலின் வேகம் குறைந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரம் வரை சென்ற நிலையில், தற்போது 2 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. இதனால் 17ம் தேதி முதல் (நேற்று) கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது. அதே நேரத்தில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள், பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை பெற்று வந்து கல்லூரி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 8 மாதங்களுக்கு பிறகு நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டது. பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. கொரோனா பயத்தில் பெரும்பாலான மாணவர்கள் வருகை தரவில்லை. வீடுகளில் இருந்தே ஆன்லைனில் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா பரிசோதனை செய்து, வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்தவர்கள் மட்டுமே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்களின் வருகை பதிவு வழக்கத்தைவிட குறைவாக இருந்தது. அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். ராய்ச்சூர் மாவட்டத்தில் ஒரு வகுப்பில் ஒரு மாணவர் மட்டுமே வந்திருந்தார்.
அவர் ஒருவருக்காக பேராசிரியர் பாடம் கற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் முதல் நாளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. அடுத்து வரும் நாட்களில் மாணவர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் கல்லூரிகளுக்கு வந்த மாணவர்கள் தங்களின் வகுப்பறைகள் மற்றும் இருக்கையை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், பெரும்பாலான மாணவர்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைனில் கல்வி கற்கின்றனர். பலர், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெறவில்லை. பரிசோதனை செய்த பலருக்கு இன்னும் முடிவுகள் வரவில்லை. அதனால் இனி வரும் நாட்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்’ என்றனர்.