சென்னையில் விடியற்காலை முதல் மழை
10/28/2020 5:31:02 PM
சென்னை: வட கிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் விடியற்காலை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நிலவிய வெப்ப சலனத்தால் கடந்த நான்கு மாதங்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்தபடியே இருந்தது. வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவமழை இந்த முறை தப்பிப்போனது. அதற்கான அறிகுறிகள் தற்போது தான் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்திய நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
அதன்படி கோயம்பேடு, வில்லிவாக்கம், அயனாவரம், பெரம்பூர், அமைந்தகரை, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலை, வடபழனி, கிண்டி, பல்லாவரம், தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், போரூர், குன்றத்தூர் போன்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் சில இடங்களில் மழை பெய்யாவிட்டாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைப்போன்று நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் அளவாக வெப்பம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சியின் காரணமாக தொடர்ந்து சென்னையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வாரத்தின் இறுதியில் அதிகமாக மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தற்போது பசிபிக் கடல் பிரதேசத்தில் அதிகரித்துள்ள லா-நினாவின் தாக்கத்தால் ஒரு வார காலத்துக்கு வட கிழக்கு பருவமழை கடுமையாக பெய்யும். தென் மாவட்டங்களில் நவம்பர் தொடக்கத்தில் தான் மழை பெய்யக்கூடும். சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி தமிழகம், புதுச்சேரியில் வட கிழக்கு பருவமழை இன்று பெய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர கடலோரப் பகுதி, தெலங்கானா, ராயலசீமா, தெற்கு கர்நாடகா, கேரளா பகுதிகளிலும் இன்று முதல் மழை பெய்யும். இந்நிலையில், நாளை மத்திய கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேலும் வலுப்பெற்று ஒரு வாரத்தில் நல்ல மழையை கொடுக்கும். குறிப்பாக இன்று முதல் மழை பெய்யத் தொடங்கும். மேலும் கடலோரப் பகுதியில் காற்று அதிகரிக்கத் தொடங்கி, காலை மாலை நேரங்களில் தமிழகத்தின் உள்ள பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.