கல்லூரி உதவி பேராசிரியர் தகுதிக்கான நெட் தேர்வு நவ. 19ல் நடைபெறும்: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு
10/20/2020 5:08:04 PM
சென்னை: கல்லூரி உதவிப்பேராசிரியர் தகுதிக்கான யுஜிசி நெட் தேர்வு நவம்பர் 19ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர் தேசியத் தகுதி தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும். இதற்கிடையில் கொரோன ஊரடங்கு நாடு முழுவதும் பிறப்பித்து உள்ளதால் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் நெட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் 24ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா நோய்தொற்று அபாயம் நீடித்ததால் அப்போதும் தேர்வு நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் நெட் தேர்வு நவம்பர் 19ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக என்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 19ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும். பாடவாரியான அட்டவணை, நேர அட்டவணை மற்றும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். இது தொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு ugcnet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.