சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு
9/30/2020 5:21:13 PM
சென்னை: ரயில்ேவ நிர்வாகம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து எழும்பூர்-நெல்லை, செங்கோட்டை, ராமேஸ்வரம், கொல்லம் இடையே கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்குவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு ெவளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 7ம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்ட்ரலில் இருந்து டெல்லி போன்ற வடமாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து கூடுதலாக தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து அதற்கான ஒப்புதல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எழும்பூரில் இருந்து 7 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி சென்னை எழும்பூர்-நெல்லை இடையே (ரயில் 02631) தினமும் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மாம்பலம், தாம்பரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லைக்கு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக நெல்லை- எழும்பூர் இடையே (ரயில்எண் 02632) இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு மறுநாள் காலை 6.35 மணிக்கு வந்தடையும். மேலும் சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே (ரயில்எண் 02661) தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், திருச்சி, மதுரை, தென்காசி வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து (ரயில்எண் 02662) இரவு 6.10 மணிக்கு புறப்பட்டு அதேவழியாக சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு காலை 6 மணிக்கு வந்தடையும்.
மேலும் சென்னை எழும்பூர்- மதுரை இடையே தேஜஸ் (ரயில் எண்02613) வாரத்தில் 6 நாட்கள் காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சி, கொடைக்கானல்ரோடு வழியாக மதுரைக்கு பிற்பகல் 12.10 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக மதுரையில் இருந்து (ரயில் எண் 02614) பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு அதேவழியாக மதுரைக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடையும். மேலும் சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் எண் (02205) தினமும் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், அரியலூர், காரைக்குடி, பரமக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு மறுநாள் காலை 4.25 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் (02206) இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தடையும்.
அதைப்போன்று எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் (06723) தினமும் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மாம்பலம், திருச்சி, மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் வழியாக கொல்லத்திற்கு மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று கொல்லத்தில் இருந்து ரயில் எண் (06724) தினமும் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு அதேவழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 8.10 மணிக்கு வந்தடையும். மேலும் சென்னை ெசன்ட்ரல்- ஆலப்புழா- சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் எண் (22639,22640) தினமும் இயக்கப்படுகிறது. அதைப்போன்று காரைக்கால்- எர்ணாகுளம்- காரைக்கால் இடையே சிறப்பு ரயில் எண் (16187, 16188) இயக்கப்படுகிறது. ஏற்கனவே 13க்கும் மேற்ப்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்கும் வகையில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து தேதி, நேரம் என்ற பட்டியலை தயார் செய்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை அனுப்பப்பட்டுள்ளதையடுத்து ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து வரும் 2ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க வாய்ப்புள்ளது. இந்த சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அனைத்து பயணிகளும் ரயில் நிலையத்துக்கு வரும் போதும், பயணத்தின்போதும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அனைத்து பயணிகளும் பயண நேரத்துக்கு 90 நிமிடங்கள் முன்னாள் ரயில் நிலையம் வர வேண்டும். பயணம் செய்யும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். ரயில் நிலையத்திலும், பயணத்தின்போதும் சமூக இடைவெளியை பயணிகள் கடைபிடிக்க வேண்டும்.