வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு
9/28/2020 5:14:06 PM
புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் விவசாயில் போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். இன்று காலை டெல்லியில் நடந்த போராட்டத்தில் டிராக்டருக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இந்த மசோதாக்கள் இப்போது சட்டமாகிவிட்டன. முன்னதாக, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்து மசோதாவில் கையெழுத்திட வேண்டாம் என்று முறையிட்டன. ஆனால் அவர் மசோதாவுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளார். இதற்கிடையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கர்நாடகா விவசாயிகள் இன்று ஒரு நாள் மாநில அளவிலான முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். வேளாண் மசோதாவை எதிர்த்து வேளாண் மண்டிகள் மூடப்பட்டுள்ளன. அவ்வாறு கடைகளை மூடிய கடைகாரர்களுக்கு விவசாயிகள் சார்பில், அவர்களுக்கு பூக்கள் வழங்கப்பட்டன. அதேபோல், டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று காலை டெல்லியின் இதயம் என்று அழைக்கப்படும் ராஜ்பத் சாலையில், வேளாண் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல் ஒரு டிராக்டருக்கு தீ வைத்தனர். அதனால், அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.
உடனடியாக அந்த இடத்தை அடைந்த போக்குவரத்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். தொடர்ந்து வாகனத்துக்கு தீ வைப்பு சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளங்கண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் மேலும் மூன்று நாள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவரும், இந்த போராட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.