ஓவிய கலையால் வரலாற்றில் இடம்பெற்றவர்களை கவின்கலை கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை
9/10/2025 5:29:56 PM
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் பயிலும் முதுநிலை கவின்கலை படிப்பிற்கான பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய நவீனக் கலையின் வரலாறு என்ற தாள் இடம்பெற்றுள்ளது. அதில் மும்பை, கொல்கத்தா, லக்னோ ஆகிய ஓவியப் பள்ளிகளை குறிப்பிடப்படும் பொழுது அந்தந்த மாநிலங்களில் தலைசிறந்த ஓவியர்களின் வரலாற்றை முன்னிலைப்படுத்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ்நாடு ஓவியப்பள்ளி என்ற பாடத்திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்து ஓவிய ஆளுமை நிறைந்தவர்களை பற்றி குறிப்பிடப்படவில்லை.
சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற, உலகிற்கே பயிற்றுவித்த வித்தகர்கள் கே.சி.எஸ்.பணிக்கர், எஸ்.தனபால், எல்.முனுசாமி, ஏ.பி.சந்தானராஜ், கன்னியப்பன், ஆதிமூலம், அருள்தாஸ் ஆகியவர்கள் தான் நினைவு கூறத்தக்கவர்கள். வருங்கால மாணவ, மாணவிகள் இவர்களை தெரிந்து, ஆராய்ந்து அவர்களை வாழ்வில் பின்பற்றப்பட வேண்டியவர்கள். எனவே, தமிழக அரசு புகழ்வாய்ந்த, தகுதிவாய்ந்து, உலகதரம் வாய்ந்த ஓவியங்களை, காலத்தால் அழியாத கலை பொக்கிஷங்களை நமக்களித்த ஓவிய பிதாமகர்களை போற்றும் விதமாக, அங்கீகாரம் அளிக்கும் விதமாக, பாடத்திட்டத்தில் திருத்தங்கள் செய்து, அவர்களின் வரலாற்றை தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.