3 அடி உயர சிவலிங்கம் கண்டெடுப்பு: துறைமுகத்தில் பரபரப்பு
9/10/2025 5:25:29 PM
தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகம் பகுதியில் பழைய கழிப்பிடத்தை இடித்துவிட்டு புதிய கழிப்பிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது 3 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு நிலவியது.‘சென்னை துறைமுகம், கிளைவ் பேக்டரி, ராஜாஜி சாலையில் பொதுகழிப்பிடம் உள்ளது. இது சில ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடந்தது. இதனால் சிரமப்பட்டு வந்த அப்பகுதி மக்கள், புதிய கழிப்பிடம் கட்டி தரவேண்டும்என மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி பழைய கழிப்பிடத்தை இடித்துவிட்டு புதிய கழிப்பிடம் கட்டும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கினர்.
இந்நிலையில் நேற்றிரவு அஸ்திவாரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். பள்ளம் தோண்டியபோது கருங்கல்லிலான சிவலிங்கம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட செய்தி அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, லிங்கத்தை பார்வையிட்டு சென்றனர். பின்னர், ஊழியர்களும், பொதுமக்களும் சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வழிப்பட்டனர். தகவல் அறிந்து வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, 3 அடி உயரமுள்ள சிவலிங்க சிலையை மீட்டனர். இது பழமையான சிலையா? இங்கு எப்படி வந்தது? இந்த இடத்தில் ஏற்கனவே கோயில் இருந்ததா? என ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்து அமைப்பினரும் சிலையை பார்வையிட்டு செல்கின்றனர். துறைமுகம் பகுதியில் சிவலிங்கம் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.