பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம்
9/9/2025 6:39:14 PM
சென்னை: பரங்கிமலை முதல் சென்ட்ரல் இடையே பச்சை வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது. பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர். தமிழக அரசின் பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் கடந்த 7ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. அப்போது, ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தொடுதலை தவிர்க்கும் வகையில் க்யூ-ஆர் கோர்டு மூலம் பயனச்சீட்டு முறையை நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. முதல் நாளில் விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையில் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. பயணிகள் வரவை பொறுத்து பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் திட்டமிட்டது.
இந்தநிலையில், பரங்கிமலை முதல் சென்ட்ரல் இடையே பச்சை வழித்தடத்தில் இன்று மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இயக்கப்பட்டது. இந்த ரயில் இரவு 8 மணி வரை இயக்கப்படும். கூட்ட நெரிசல் மிகுதியான நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளது. இதேபோல், ரயில்கள் நிற்கும் நேரம் 20 வினாடிகளில் இருந்து 50 வினாடிகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் க்யூ-ஆர் கோர்டு பயணச்சீட்டு முறை மற்றும் இணையவழி பயணச்சீட்டு முறையை பயன்படுத்தவும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக 2 முறை காற்று சுத்திகரிப்பு முறையை பின்பற்றி வருகிறது.
இதேபோல், மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய முதல் நாளான 7ம் தேதி சேவையை வெறும் 5 ஆயிரத்து 33 பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். வழக்கமாக மெட்ரோ ரயில் சேவையை நாள் தோறும் 90 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்துவார்கள். ஆனால், கொரோனா பரவல் காரணமாக சேவையை பயன்படுத்த பொதுமக்கள் தயக்கம் காட்டியுள்ளனர். வரக்கூடிய நாட்களில் சேவையை அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.