மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க 21 முதல் 25ம் தேதி வரை ஆன்லைன் வகுப்பு நடத்த தடை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
9/9/2025 6:36:22 PM
கோபி: மாணவர்களின் மனஅழுத்தம் குறைப்பதற்காக வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை 5 நாட்கள் ஆன்லைன் வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே வெள்ளாங்கோயிலில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கல்வியை கற்று தரும்போது காலாண்டு, அரையாண்டு விடுமுறை என்ற முறையில் முதலமைச்சர் ஒப்புதலோடு வரும் 21ம் தேதி (திங்கள்) முதல் 25ம் தேதி (வெள்ளி) வரை ஆன்லைன் வகுப்பு நடத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கவும், மகிழ்ச்சியோடு இருக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 21ம் தேதி முதல் அந்தந்த மாநிலங்களின் நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்கலாம் என கூறியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் குறைந்த பின்புதான் இதுகுறித்து முடிவெடுக்கப்படும். தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறதா என்பதை வட்டார அளவிலான கல்வித்துறை அதிகாரிகள் குழு கண்காணிக்கும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.