வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் ஆபாச சைகை: அதிமுக பிரமுகர் மகனுக்கு வலை
9/7/2025 5:40:44 PM
ஊட்டி: ஊட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஆபாச சைகை காட்டி, மிரட்டிவிட்டு சென்ற அதிமுக பிரமுகர் மகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். அ.தி.மு.க. பிரமுகரான இவர், முன்னாள் ஊட்டி நகராட்சி துைண தலைவர் ஆவார். கோபாலகிருஷ்ணன் ஊட்டியில் உணவகம் நடத்தி வருகிறார். போலீசார் நேற்று முன்தினம் காலை ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எட்டின்ஸ் சாலையில் சொகுசு காரில் கோபாலகிருஷ்ணன் வந்தார். காரை அவரது மகன் சுஜித் கிருஷ்ணா ஓட்டி வந்தார்.
அவர் இடதுபுறமாக செல்லாமல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வலது புறமாக சென்றதாக தெரிகிறது. மேலும் அவர் சீட் பெல்ட் மற்றும் முக கவசம் அணியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த போலீசார் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் சுஜித் கிருஷ்ணா வாகனத்தை நிறுத்திய போலீசாரை பார்த்து ஆபாச சைகை காண்பித்தபடி, ‘‘நீ என்னை போட்டோ எடுத்து ஒன்னும் செய்ய முடியாது’’ என ஒருமையில் கூறிவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். இதை போலீஸ்காரர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஊட்டி பி1 காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரை ஆபாச சைகை காட்டி ஒருமையில் பேசிச் சென்ற சுஜித் கிருஷ்ணா மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.