நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு
8/15/2020 2:42:56 PM
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிவைத்த பிரதமர் மோடி, பெண்களின் திருமண வயதை மாற்றி அமைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவுக்காக 3 தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளதாகவும், உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.110 லட்சம் கோடி திட்டம் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். நாட்டின் 74வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் கொரோனா காலத்திலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் முன், தொற்று பரவல் அச்சத்தால் விழாவில் பள்ளி மாணவர்கள் எவரும் பங்கேற்க அனுமதிக்கவில்லை. வெளிநாட்டு தூதர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுர்கள் என குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டனர். இன்றைய நிலையில் நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் எல்லை பிரச்னைகளுக்கு மத்தியில் இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தொடர்ச்சியாக 7வது ஆண்டாக நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றும் நிகழ்ச்சிகள் காலை 7 மணிக்கு தொடங்கின.
அதன்படி, காலை 7.15 மணியளவில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு காந்திக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 7.25 மணியளவில் விழா நடக்கும் இடத்திற்கு வந்தார். அப்போது முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 7.30 மணியளவில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தபின், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி ஆற்றிய உரை விபரம் வருமாறு: நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரம். இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும். சுயசார்பு இந்தியாவை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டு வருகிறது. விவசாயம் முதல் விண்வெளி வரை அனைத்து துறையிலும் சுயசார்பு அவசியம். நம்மிடம் வென்டிலேட்டர், என் 95 முகக் கவசம், பிபிஇ கருவிகள் இல்லாமல் இருந்தன. ஆனால், நாமே அதனை தயாரிக்கிறோம். சுயசார்பில் முன்னேற சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் ஒற்றுமை உலகிற்கே ஒரு பாடம். இன்று, முழு உலகமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒன்றையொன்று சார்ந்துள்ளன. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதற்காக, நாடு தன்னம்பிக்கையை பெற வேண்டும்.
உலகை இந்தியா வழிநடத்திட வேண்டும். சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது அனைத்திற்கும் அடிப்படையானது. இந்தியாவில் நடைபெற்று வரும் சீர்திருத்தங்களை உலக நாடுகள் கவனித்து வருகின்றன. கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியிலும் கூட இந்தியாவின் அன்னிய நேரடி முதலீட்டில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது. உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம். ‘மேக் இன் இந்தியா’ மட்டுமல்ல, ‘மேக் பார் வேர்ல்ட்’ என்ற தாரக மந்திரத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்திய தயாரிப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்போம். ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு என்று பலவகைகளில் நாடு முன்னேறி வருகிறது. ஊரடங்கு காலத்தில் 7 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 80 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச உணவு பொருள் வழங்கப்பட்டன. சுமார் ரூ.90,000 கோடி நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. புதியக் கல்வி கொள்கை ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். புதிய எரிவாயு திட்டம் 7,000 வகையான திட்டங்கள் ரூ.110 லட்சம் கோடியில் தேசிய உள்கட்டமைப்பு செயல்படுத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும் 110 பின்தங்கிய மாவட்டங்களை தேர்வு செய்து அவற்றை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் கிடைப்பது உறுதி செய்யப்படும். ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டம் மூலம் 2 கோடி தொலைதூர பகுதி குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க முடிந்தது. விவசாயிகளின் நலனுக்காக நவீன உள்கட்டமைப்பை ஏற்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ‘வேளாண் உள்கட்டமைப்பு நிதி’ உருவாக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் நாட்டின் மிகப்பெரிய பலம். அவர்களின் வீடு கனவை நிறைவேற்ற ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா விஷயத்தில் 1 ஆய்வகத்திலிருந்து 1,400 ஆய்வகங்கள் வரையும், ஒரு நாளைக்கு 300 சோதனைகளாக இருந்தது இன்று ஒரு நாளைக்கு 7 லட்சம் சோதனைகள் வரை நடத்தப்படுகிறது. இன்று முதல் ‘தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷன்’ தொடங்கி உள்ளோம். இதன் பணியானது, இந்தியாவின் சுகாதாரத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது தயாராகும் என்று எல்லோரும் கேட்கிறார்கள். நமது விஞ்ஞானிகளின் கடும் முயற்சியால் மூன்று தடுப்பூசிகள் வெவ்வேறு பரிசோதனை கட்டங்களில் உள்ளன. விரைவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடைவதை உறுதி செய்வோம். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் உள்ளது. பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் நாட்டை வலிமையடையவும், பெருமையடையவும் செய்கின்றனர்.
பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பிலும், வேலைவாய்ப்பிலும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும். நமது மகள்கள் (பெண்கள்) போர் விமானங்களை ஓட்டி வானத்தையும் தொடுகின்றனர். நமது மகள்களின் (பெண்களின்) குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது நிர்ணயம் தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு காஷ்மீர் புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிக்கிறது. விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்படும். இமயமலையின் உயரத்தில் அமைந்துள்ள லடாக், அதன் வளர்ச்சியில் புதிய உயரங்களைத் தொட முன்னேறி வருகிறது. எல்ஐசி (சீன எல்லை) முதல் எல்ஓசி (பாகிஸ்தான் எல்லை) வரை தேசிய பாதுகாப்பை அச்சுறுத்த முயற்சித்த அனைவருக்கும், நமது வீரர்கள் பொருத்தமான தக்க பதிலடி அளித்தனர். லடாக்கில் நடந்த பதிலடிக்கு பிறகு இந்தியாவின் திறனை உலக நாடுகள் கண்டிருக்கிறது. உயிர் இழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். வந்தே மாதரம்! இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். விழாவில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், பாதுகாப்பு படை தளபதி பிபின் ராவத், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.