கோடி கணக்கில் வெளிநாட்டு பணம் பதுக்கிய சொப்னா
8/15/2020 2:34:13 PM
திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள சொப்னா கோடி கணக்கான வெளிநாட்டு பணத்தை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் அடங்கும். இந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் பணியாற்றும் தூதரக அதிகாரிகளுக்கு செல்வாக்கு இருந்து வந்தது. இதை பயன்படுத்தி சொப்னா பார்சலை அனுப்பி, தங்கத்தை கடத்தி வந்து உள்ளார். அதன்படி கடந்த 2018 முதல் பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்கள் வழியாக ஏராளமான பார்சல்களை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் வாகனங்களில் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு சென்றுள்ளார். இந்த பார்சல்களில் பெருமளவு தங்கம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் சுங்க இலாகாவினருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இவருக்கு அரசியல்வாதிகளுடனும் செல்வாக்கு இருந்துள்ளது. இதை அதிகமாகவே தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளார். பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்த பார்சல்கள் திருவனந்தபுரம், மலப்புரத்தில் உள்ள சில ரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. வந்தே பாரத் விமானங்கள் மூலம் ரூ.10 கோடிக்கு மேல் வெளிநாட்டு பணத்தை சொப்னா துபாய்க்கு கடத்தியதும் தெரியவந்துள்ளது.
கொரோனா பிரச்னையால் வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்க, மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். கேரளாவுக்கு வரும் விமானங்கள் திரும்பி செல்லும்போது இங்கு சிக்கிய வெளிநாட்டினரை அழைத்து செல்வது உண்டு. இப்படி செல்பவர்கள் மூலம் சொப்னா ரூ.10 கோடிக்கும் ேமல் வெளிநாட்டு பணத்ைத கடத்தி உள்ளார். சொப்னாவின் வங்கி லாக்கரை பரிசோதித்து பார்த்த போது 8,034 அமெரிக்க டாலர், 711 ஓமன் ரியால் சிக்கின. கோடி கணக்கில் வெளி நாட்டு பணத்தை சொப்னா கடத்துவதாக ஏற்கனவே என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. ஆனால் லாக்கரில் குறைந்த அளவே ெவளிநாட்டு பணம் இருந்துள்ளது. ஆகவே கோடிக்கணக்கான பணத்தை எங்காவது பதுக்கி வைத்து இருக்கலாமோ? என்ற சந்தேகம் என்ஐஏ, சுங்க இலாகாவுக்கு எழுந்துள்ளது. இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கில் என்ஐஏ நேற்று மேலும் 4 பேரை ‘உபா’ சட்டத்தில் கைது செய்து உள்ளது. இதையடுத்து வழக்கில் ைகதானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது.