மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி
8/10/2025 2:53:04 PM
திருவனந்தபுரம்: மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. தேயிலைத்தோட்ட நிறுவன கணக்கின்படி மண்ணுக்கடியில் இன்னும் 28 பேர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை தேடும் பணி இன்று 4வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
கேரள மாநிலம் மூணாறு அருகே பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்ட தமிழக தோட்டத்தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 6 மாத குழந்தை உள்பட17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 8 உடல்கள் அருகில் உள்ள ஆற்றில் இருந்தும், 9 உடல்கள் சகதியில் இருந்தும் மீட்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
கண்ணன் தேவன் தேயிலை நிறுவன கணக்கின்படி குடியிருப்புகளில் மொத்தம் 83 பேர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 28 பேர் இன்னும் மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. வருவாய்த்துறை கணக்கின்படி 78 பேர்தான் அங்கு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த 2 கணக்குகளும் தவறு என்று அந்த பகுதியினர் கூறுகின்றனர். ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால் வெளியூரில் படித்துவந்த மாணவர்கள் திரும்பியிருந்தனர் எனவும் கூறுகின்றனர். மூணாறில் படித்துவந்த இன்ஜினியரிங் மாணவர்கள் நிதிஷ், தினேஷ் ஆகியோர் கல்லூரி மூடப்பட்டதால் அவர்களது வீடுகளில் இருந்தனர். இதில் நிதிஷின் உடல் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் தேயிலை தோட்டத்தின் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையின் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள உறவினர்கள் சிலர் வந்திருந்தனர். இவர்கள் திரும்பி சென்றார்களா? என்பது தெரியவில்லை. இவர்களும் நிலச்சரிவில் சிக்கி இருந்தால் பலி எண்ணிக்கை 100ஐ தாண்ட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை 4வது நாளாக மீட்புப்பணி தொடங்கியது. அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.
ஒரே குடும்பத்தினர் 6 பேர் பலி
மூணாறு நிலச்சரிவில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமத்தை சேர்ந்த ராசையா, சரோஜா (எ) மகாலட்சுமி, ஜோஸ்வா, அருண்மகேஸ்வரன், அண்ணாத்துரை, மரியபுஷ்பம் ஆகியோர் மண்ணில் புதைந்துள்ளனர். இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பெட்டிமுடியில் தங்கி வேலைபார்த்து வந்தனர். இதில் முதல் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அண்ணாத்துரை, மரியபுஷ்பம் உடல்களை தேடும் பணி நடக்கிறது.