மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?
8/9/2025 2:18:54 PM
திருவனந்தபுரம்: மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களில் 19 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மழை நீடித்து வருகின்ற நிலையில் மீட்பு பணி இன்றும் தீவிரமாக நடந்து வருகிறது. கேரள மாநிலம் மூணாறு அருகே பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்ட தமிழக தோட்டத்தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். கடந்த 2 நாளாக போலீஸ், தீயணைப்புப்படை, வனத்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பொது மக்களின் உதவியுடன் 12 பேரை உயிருடனும், 26 பேரை சடலமாகவும் மீட்டு உள்ளனர். 26 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு அருகில் உள்ள மைதானத்தில் தோண்டப்பட்ட 3 குழிகளில் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது. நேற்று கிடைத்த உடல்கள் விஜிலா (47), குட்டிராஜ் (48), பவன்தா ய்(52), சண்முக ஐயர் (58), மணிகண்டன் (20), தீபக் (18), பிரபா (55), பாரதிராஜா (35) எனவும், நேற்று முன்தினம் கிடைத்த உடல் சரோஜா (58) எனவும் தெரியவந்துள்ளது. இது தவிர மண்ணுக்கு அடியில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அவர்களை மீட்கும் பணி 3வது நாளாக இன்று காலையில் தொடங்கியது. இந்த மீட்பு பணியில் சுமார் 200 பேர் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை ஒருவரது உடல் கிடைத்தது. இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்து உள்ளது. மீட்கப்பட்ட உடல் ராஜமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே இன்று காலையும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணியில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீட்புப்படையினர் தங்களது பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள அமைச்சர்கள் சந்திரசேகரன், மணி ஆகியோர் மூணாறில் முகாமிட்டு மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களில் 19 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்து உள்ளது. மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து உடனடியாக தகவல் இல்லை. இதற்கிடையே மீட்புப்பணிகளுக்காக திருவனந்தபுரத்தில் இருந்து நவீன உபகரணங்களுடன் தீயணைப்புப்படையினர் விரைந்துள்ளனர். நிலச்சரிவு நடந்த இடத்தை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் இன்று பார்வையிட்டார்.
நிலச்சரிவு நடந்தபோது வீடுகளில் 78 பேர் இருந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின் உறவினர்கள் சிலர் தமிழகத்தில் இருந்து வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளில் 83 ேபர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே 45 ேபர் மண்ணுக்கடியில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட சோலை வனப்பகுதியில்தான் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று வனத்துறை கருதுகிறது. இந்த நிலச்சரிவில் வனக்காவலர்களான மணிகண்டன், அச்சுதன், ராஜா, டிரைவர்களான கணேசன், மயில்சாமி ஆகியோர் காணாமல் போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர வனத்துறை பெண் ஊழியரான ரேகா என்பவரும் காணாமல் போயிருந்தார். அவரது உடல் பின்னர் கிடைத்தது. ராஜமலை பகுதியில் உள்ள மேலும் 2 இடங்களில் தொழிலாளர்களின் உடல்கள் புதைந்து இருக்கலாம்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணி இன்று காலை தொடங்கியது.