ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முடிவு; மகிந்த ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர்..ரணில் விக்ரமசிங்க படுதோல்வி
8/7/2025 2:33:41 PM
கொழும்பு: இலங்கையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளதால் மீண்டும் மகிந்த ராஜபக்ேச பிரதமராக பதவியேற்க உள்ளார். ரணில் விக்ரமசிங்க படுதோல்வியை சந்தித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம் உள்ள 225 இடங்களில், கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தவிர்த்து 196 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி இரவு வரை நீடித்தது. பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க படுதோல்வியை சந்தித்துள்ளார். தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க, பொதுத்தேர்தலில் முதல்முறையாக தோல்வியடைந்துள்ளார். கொழும்புவில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இவரது கட்சி தேர்தலில் 5ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற, சஜித் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 23.3 சதவீத வாக்குகளைப் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளது. அதற்கடுத்தபடியாக ஜெஜெபி கட்சிக்கு 3.84 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
4ம் இடம் பிடித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு 2.82 சதவீத வாக்குகளும், 5ம் இடம் பிடித்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு 2.15 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை அதிபர் கோத்தய ராஜபக்சே கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளன. அதனால், மீண்டும் பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்க உள்ளார். இலங்கையில் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கின்றன. ராஜபக்சேவின் அமைச்சரவையில் அவரது மகன் நமல் ராஜபக்சேவுக்கு முக்கிய பொறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.