காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும்
8/6/2025 2:39:47 PM
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று அதிகாலை கரையைக் கடக்கத் தொடங்கியது. இதையடுத்து, தமிழகத்தில் மழை தொடரும். மேலும், 9ம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்தம் வங்கக் கடலில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும். வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று இரவு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று இன்று அதிகாலை 4 மணிஅளவில் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் வழியாக சென்று குஜராத்தில் நுழைந்து அரபிக் கடலில் இன்று மாலை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக நேற்று கன்னியாகுமரி முதல் குஜராத் வரையிலான அரபிக் கடலோரப் பகுதியில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மும்பையில் கடும் மழை கொட்டித் தீர்த்தது. காற்றுடன் கனமழை பெய்த காரணத்தால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நீலகிரி மாவட்டத்தில் மேற்குப்பகுதியில் மிக கனமழை பெய்தது சுமார் 500 மிமீ வரை கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். கடும் மழை காரணமாக அங்கு பல இடங்களில் சாலைகளில் பெரிய அளவிலான மரங்கள் முறிந்து விழுந்தன.
மேலும் தொடர்ச்சியாக அங்கு மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை 8ம் தேதி வரை நீடிக்கும். இதையடுத்து 9ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9, 10ம் தேதிகளில் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் மிக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம்,மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும். தென் மேற்கு திசையில் இருந்து கடும் காற்று நேற்று முதல் வீசிக் கொண்டு இருக்கிறது.
அது உடுமலைப் பேட்ைட, கோவை, கரூர் நாமக்கல் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம் தெற்கு பகுதிவரை வீசி வருகிறது. இன்று மாலை இந்த காற்று விலகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்று விலகியபிறகு படிப்படியாக மேற்கண்ட இடங்களில் மழை பெய்யத் தொடங்கும். நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யும். இந்த மழை 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை பெய்யும். குறிப்பாக ஒவ்வொரு இடத்திலும் 1 முதல் 3 நாட்கள் வரை இந்த மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6,7 ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 9.10ம் தேதிகளில் கூடுதல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.